நிழற்சாலை


இமை திறக்கும் கானகம்

வனங்களின் கருமையைப் போர்த்தியவாறு
மெல்ல உறங்க முயல்கின்றன மரங்கள்
துயில் தாலாட்டை
மென்மையாய் இசைத்து
நடைபோடுகிறது ஓடை.
வழி தவறி வந்தமர்ந்த
பறவைகளின் கிரீச்சிடல்கள்
மரக்கொம்புகளை
ஊஞ்சலாக்குகின்றன.
நிசப்தங்கள்
கலைந்துபோன
அந்த நொடியில்
விழித்துக்கொள்கிறாள்
வன தேவதை!
- பி.கே.முஹமது ஜவாஹிர்

இடம் பெயர்தல்

கை கொண்ட
பொருளை வைத்து
ஜன்னல் ஓர
முன்பதிவுகள்.
இறங்கும் இடம்
வந்தபோதும்
எழ சலிக்கும்
ஜென்மங்கள்.
வெற்றிலை
குதப்பும் எச்சிலால்
முகத்தில் தெறிக்கும்
சாரல்கள்.
தோள் மீது தலை
சாய்த்து
குறட்டையடிக்கும்
மனிதர்கள்.
காது கிழித்து
குலை நடுங்க
இடியாய் இறங்கும்
ஸ்பீக்கர்கள்.
சாலை வழியே
கரைகின்றன
அன்றாடப்
பயணங்கள்.
- செந்துறை எம்.எஸ்.மதுக்குமார்

x