நிகழில் வாழும் எதிர்
இடிந்த வீட்டின் வாயிலில்
அழுக்கேறி நிற்கும் மதிலின் மீது
அமர்ந்திருக்கும் பூனையின் கண்களென
மின்னிக்கொண்டிருப்பவர்கள்
புசுபுசு உரோமங்கொண்ட அதன்
மென் பாதங்களொத்த மனங்களைக்
கூரிய நகங்களெனும் சொற்களால்
பிராண்டியும் வைக்கிறார்கள்.
சிவந்த மூக்கின் கீழே
சொருகி வைத்த கம்பியென மீசை நிற்க
நாவினால் தன் இதழ்களைத்
துழாவியபடி ‘மியாவ்’ என்கிறதந்த
புலி உருகொண்ட பூனை.
இதுவும் கடந்துபோகும்.
- சிவ.விஜயபாரதி
ஆசிரியப்பா
மூக்குக்குள் பல்பம் திணித்து
மூச்சுத் திணறியபோது
காப்பாற்றிய மீசைக் கேசவன் சார்
ஒண்ணுக்கு மணியடித்தால்
பருத்திப் பாயசம் தரும்
அறிவுக்கொடி டீச்சர்
அம்மா சமைக்காத நாட்களில்
மதிய சாப்பாடாய்
பருப்பு உருண்டை தரும்
மணிமேகலை டீச்சர்
அச்சு அசலாய்
அவரைப் போலவே எழுதவைத்த
எட்டாம் வகுப்பு எம்.எஸ்.சார்
அடிக்குப் பயந்து
கணக்குப்பேப்பரை
கடித்துவிழுங்கியபோதும்
கடிந்து கொள்ளாத
அருணாசலம் சார்
கல்லூரியில்
இனிக்க இனிக்க தமிழ் ஊட்டிய அபி சார்
ஆசிரியர்கள் நிகழ்த்திய ஆச்சரியங்களை
அசைபோட்டுக்கொண்டே
பால்ய நினைவுகளில்
நீந்துகிறது நெஞ்சப் பறவை.
- காசாவயல் கண்ணன்