தேர்தல் ஒரு கேலி விளையாட்டு!


‘வாக்களிப்பதால் மாற்றம் வருமென்றால் அரசியல்வாதிகள் தேர்தலை நடத்தவே விடமாட்டார்கள்’ என்கிறார் மார்க் ட்வைன் என்ற தத்துவ அறிஞர். அதேபோல் ஓவியர் வில்லியம் ஹோகார்ட் தேர்தலை ஒரு கேலி விளையாட்டு என்றே விமர்சிக்கிறார். இது ஓரளவுக்கு உண்மையும்கூட! 

வில்லியம் ஹோகார்ட் பிரிட்டிஷ் ஓவியர். 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் பிரிட்டிஷ் பாராளுமன்றத் தேர்தல்களைத் தனது ஓவியங்களில் வெகுவாக விமர்சித்திருக்கிறார். தேர்தல் குறித்து நான்கு ஓவியங்களை வரைந்த இவர், அந்த ஓவியங்களுக்கு ‘தேர்தல் பொழுது போக்கு’ (An Election Entertainment) என்றே பெயரும் வைக்கிறார்.

1754-ல், இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட்ஷையரில் நடந்த தேர்தலை முன்வைத்தே இவர் இந்த ஓவியங்களை வரைந்தார். தேர்தலில் நடந்த முறைகேடுகள், வாக்காளர்களைக் கவரும் விதம், வேட்பாளர்களின் ஆடம்பர ஆட்டம், ஓட்டுப்பதிவில் நடக்கும் லஞ்ச லாவண்யம், வெற்றி தரும் போதை ஆகியவற்றையெல்லாம் இந்த ஓவியங்களில் அவர் பதிவு செய்தார். 

இங்குள்ள ஓவியத்தில் விடுதி ஒன்றில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆளும் கட்சியினர் ஏற்பாடு செய்த இந்த விருந்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெரிய போராட்ட பேரணி நடப்பது ஜன்னல் வழியே தெரிகிறது. அந்தக் கூட்டத்தின் மீது ஆளும்கட்சியைச் சேர்ந்த ஒருவன் நாற்காலியைத் தூக்கி வீசுகிறான். போராட்டக் கூட்டத்திலிருந்து யாரோ எறிந்த செங்கல் விருந்தில் இருக்கும் ஒரு நபரின் தலையில் வந்து விழுகிறது. ஓவியத்தில் ஒருபக்கம் மிதமிஞ்சிய சாப்பாடும், மதுவும் எடுத்துக்கொண்டு சரிந்து கிடக்கிறார்கள். ஒரு கர்ப்பிணிப் பெண் ஒருவனை முத்தமிடுகிறாள். ஒருபக்கம் வயலின் வாசிக்கிறார்கள். இருவர் தங்களுக்குள் ஏதோ ரகசியம் பேசுகிறார்கள். கூட்டத்தில் நாலைந்துபேர் ஏதோ கேலி பேசி சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆக, விருந்தில் இருப்பவர்களுக்கெல்லாம், நடக்கும் தேர்தல் ஒரு கொண்டாட்டம், கேளிக்கை என்பதை இந்த ஓவியத்தின் மூலம் வெளிப்படுத்துகிறார் ஓவியர் ஹோகார்ட். 

x