கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in
எளிமையான மனிதர்கள். எளிமையான வாழ்க்கை. மிக மிக எளிமையான எழுத்தில் எளிய கதைகள். முதல் தொகுப்பின் தடுமாற்றங்கள் இருந்தாலும் பூச்சு எதுவுமின்றி அசல் மனிதர்களின் வாழ்க்கை விளக்கத்தில் பளபளக்கின்றன கதைகள். ‘மண் வாசனை’ என்ற முதல் கதையே இழந்த பூர்வீக வாழ்வைப் பேசினாலும் சொன்ன முறையில் வித்தியாசப்படுகிறது. பணத்தாசை பிடித்தவர்கள் சிரிக்க மாட்டார்கள். அவன் சிரிப்பை மறந்து பல வருடங்களாகிவிட்டன என்றொரு வரி வந்துபோகிறது ‘அசரீரி’ கதையில். எத்தனை சத்தியமான அவதானிப்பு.
முதல் கதையின் எழுத்து நடையிலே ‘உறவுகள்’ கதை வந்தாலும் இது வேறு கதையாகத்தான் தோன்றுகிறது. ‘நெய்வேத்தியம்’ கதையில் வரும் ‘ கோலத்திற்காக நித்யா வைத்த புள்ளி அதனுடைய வரிசையை மறந்து தொடர்ந்து வந்த புள்ளிகள் எல்லாம் அப்படியே கும்பகோணத்திற்குச் சென்றன’. அழகான படிமத்தை கண் முன் நிறுத்தி கதைக்கு மேலும் ஓர் அழகியலைச் சேர்க்கிறது வரி. ‘மாயகிருஷ்ணன்’ கதை ஒரு தந்தையின் அளவிட முடியாத அன்பை அள்ளித்தந்து கலங்க வைக்கிறது. ‘மனம்போல் வாழ்வு’ என்ற கதை, தலைப்புக்கேற்றார் போல் பழைய தமிழ் சினிமாவை ஞாபகப்படுத்தினாலும் குமாருக்கும் அவன் அத்தைக்கும் இடையில் இருக்கும் இனம் புரியாத உறவு ஆச்சரியம் தந்தபடியே முடிகிறது. 2030 ல் நடப்பதாய் எழுதப்பட்டிருக்கும் ‘முன்னோட்டம்’ கதை உண்மையிலே மனிதன் இப்பூமியில் வாழ்வதற்கான முன்னோட்டமாய் தெரிவது வாழும் காலத்தின் அவலம் இல்லாமல் வேறென்ன?
பல கதைகள் இடம் பெயர்தல் முன்வைத்தே எழுதப்பட்டிருக்கின்றன. சொந்த நாட்டில் அகதியாகும் துயரம் வேறு வடிவில் தரப்பட்டிருக்கிறது எனலாம். பிறப்பு ஓர் இடம் வளர்ப்பு ஓர் இடம் பெண்ணுக்கு மட்டுமல்ல; ஆணுக்கும் அதே கதிதான் என்பதாக எழுதப்பட்டிருக்கின்றன கதைகள். சொல்ல வந்ததைத் தெளிவாய் சொல்லாமல் முடியும் ‘மனப்பத்தாயம்’ போன்ற கதை தொகுப்புக்கு திருஷ்டியாக உள்ளது. அதேபோல் எல்லா கதையும் இயல்பான மனிதர்களின் உரையாடலாய் இருக்க கும்பகோணத்து பிராமணாள் பாஷையை வலிய திணித்ததுபோல் இயல்பற்று இருக்கிறது ‘பாலக்கரை’ கதை. கதையும் 60 களில் நிகழ்வதுபோல் எழுதப்பட்டிருக்கிறது. மிக விரிவாய் பேச வேண்டிய வாழ்வினை ஏதோ நிர்பந்தத்தில் மிகச் சுருக்கமாய் முடித்துக்கொண்டதுபோல் ஏமாற்றம் தருகின்றன சில கதைகள். எழுத்தைத் தன் கைவசம் வைத்திருக்கும் ஜ. பாரத் தொடர்ந்து எழுதுவதன் மூலம் இன்னும் பல நல்ல கதைகளைத் தர வாழ்த்துகள்.