கோடை விடுமுறை நீட்டிப்பு: மீனாட்சியம்மன் கோயிலுக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு


கோப்புப்படம்

மதுரை: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டதால் மீனாட்சியம்மன் கோயிலுக்கு கடந்த 2 நாட்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் 6ம் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கோடை வெயில் மறுபடியும் சுட்டெரிக்கத் தொடங்கியதால் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டு வரும் 10-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், கோடை விடுமுறையில் பள்ளிக் குழந்தைகளுடன் பெற்றோர்கள் சுற்றுலா செல்வது அதிகரித்துள்ளது. மதுரைக்கு மீனாட்சியம்மன் கோயில், காந்தி அருங்காட்சியகம், திருமலைநாயக்கர் மகால், அழகர்கோயில் போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

இதுவரை சுற்றுலா செல்லாதவர்கள், குழந்தைகளை அழைத்துக் கொண்டு மதுரை, கொடைக்கானல், ராமேசுவரம் போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு கடந்த 2 நாட்களாக அதிகளவு வந்துள்ளனர்.
மீனாட்சியம்மன் கோயிலுக்கு கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

அதன் காரணமாக பக்தர்கள், நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை நல்ல முகூர்த்த தினம் என்பதால் மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் கோயிலில் ஏராளமான திருமணங்கள் நடந்தது. திருமண விழாவுக்காக வந்திருந்த உறவினர்கள், ஹோட்டல்கள், விடுதிகளில் முந்தைய நாட்களே வந்து தங்கியிருந்து மதுரையில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு சென்றனர்.

இவர்களில் அதிகமானோர் மீனாட்சியம்மன் கோயிலில் திரண்டதால் பக்தர்கள் கூட்டம் கடந்த 2 நாட்களாக அலைமோதியது. 2 முதல் 3 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருப்பரங்குன்றம் கோயிலில் அதிகளவு திருமணங்கள் நடந்ததால் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த உறவினர்கள் கூட்டம், வழக்கமாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தால் திருவிழா போல் திரும்பிய பக்கமெல்லாம் கூட்டம் காணப்பட்டது.