அலைகளில்
கரையும் வினாக்கள்
தாகம் தீர்க்கப்
பயன்படாத
ஆழி நீரைப் பற்றிய
ஆர்வம் அதிகமில்லை.
ஆர்ப்பரிக்கும் அலைகளும்
அகன்று விரிந்த நீலப்பரப்பும்
பெரும் கவனத்தை ஈர்ப்பவை.
பல உயிர்களை வாழவைத்தும்
பல உயிர்களைச் சாகடித்தும்
சமுத்திரமாய் விரவிக்கிடப்பதில்
என்ன சுகமோ? சுவையோ?
சுற்றளவைச் சொல்ல இயலாத
பரந்து விரிந்த வட்டமா?
தூரத் தெரியும் வானத்தை
பிரதிபலிக்கும் நீர்க்குவியலா?
திமிங்கலங்களின் தாயகமா?
திசையறியாத ஆறுகளின் முடிவிடமா?
முத்துகளின் முகவரியா?
உவர்ப்பின் உறைவிடமா?
எண்ணிடலங்கா வினாக்களுடன்
நீளும் என் சிந்தையை
இழுத்துச் செல்கின்றன
பேரிரைச்சலான
அலைகள்.
- பெருமாள் ஆச்சி
போங்காட்டம்
நல்லாயிருக்கே உன் விதி
அருவி பாட்டுக்கு
தலைகீழாய் விழுமாம்
நனைந்து தலை உதறி
துண்டு பிழிந்து கரையேற நீ,
குச்சி வைத்து தட்டி
ஒழுங்குபடுத்துகிறேன் பேர்வழியென
துளி தண்ணீரை
உடம்பு ருசிக்காமல் அலைய நானா?
காடு மணந்து கிடக்குமாம்
பூப்பூவாய் மகரந்தத்தை
இழுப்பிக்கொண்டு
தேனுறிஞ்சிப் பறக்க நீ,
என்றோ காய்ந்த பட்டையை
உரித்துப்போடக்கூட
ஆளில்லாத பட்டமரமாக
பட்டாம்பூச்சியைத்
தொட்டறியாது நிற்க நானா?
இதெல்லாம்
கருக்குழியில் தள்ளி
களத்தில் இறக்கிவிட்டா
சொல்வது?
வருமுன்னர் சொல்லியிருந்தால்
இந்த ஆட்டத்துக்கு நான்
சரிப்படமாட்டேனென மறுத்திருப்பேனே!
- உமா மோகன்
நிசப்தத்தின் டெசிபல்
சிதைந்த கோட்டைகளில்
மெளனமாய்க் கிடக்கும்
கல்
எத்தனை ராணிகளை
ரசித்திருக்கும்?
இன்னும் மிச்சமிருக்கும்
இரும்புப் பூட்டு
எத்தனை ரகசியங்களை
காத்திருக்கும்?
இளவரசிகளின் பாதச் சுவடுகளில்
புற்களே பல ஜென்மம் கண்டிருக்கும்.
மாலை வெயிலில்
விளிம்புகள் மின்னும்
கோட்டைகளிலிருந்து
வெளியேறுகிறேன்
ஏனோ இப்போதெல்லாம்
பேரழகைக்
காணுகையில்
பிரிவுதான்
நினைவிற்கு வருகிறது.
ஆம்,
நிசப்தம் என்பது
மெளனத்தின் அலறல்.
- இளங்கவி அருள்
வறுமையின் சுவடுகள்
நேற்றைய பொழுதில்
செங்கற்களைச் சுமந்த வலி.
இன்றைய காலையில்
விறகுச் சுள்ளிகளுக்கு காட்டில்.
அலைந்ததுதான் மிச்சம்.
மழைபெய்து ஓய்ந்த நிலப்பரப்பில்
கிடைத்தவை ஈரமான விறகுகள்.
அடுப்பங்கரை புகைமூட்டத்தில்
எப்படியோ தந்தைக்குச் சமைத்து
தம்பிக்குச் சோறூட்டிவிட்டு
பள்ளிக்கு வரும் வழியில்
வீட்டுப்பாடங்களை எழுதி முடித்தாள்.
ஆசிரியரின் பிரம்படி பெறாமல்
தப்பித்த அந்த ஏழைச் சிறுமிக்கு
உச்சி முதல் பாதம்வரை
அழியாத சுவடுகளாய்
இருக்கின்றன
மானுடவியலின்
வறுமைக் கோடுகள்!
- கா.ந.கல்யாணசுந்தரம்