கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in
ஒட்டக மனிதர்கள் - கதைத் தொகுப்பு
தொகுப்பாசிரியர்: ஆசிஃப் மீரான்
வெளியீடு: தமிழ் அலை
தொடர்புக்கு:
தமிழ் அலை பதிப்பகம்,
சென்னை.
போன் - 9486838801
விலை - 200 ரூபாய்
மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் எழுத்தாளர்களின் கதைகள் அமீரகச் சிறுகதைகளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 20 பக்கங்களுக்கும் மேலாக ஒரு பெரு வாழ்வை விவரிக்கும் ஆபிதீனின் ‘வாழைப்பழம்’ கதை முதல் கதையாக இடம் பெற்றிருக்கிறது. கள்ளஹாஜி, நல்லஹாஜியாக மாறும் கதை. கதாசிரியரின் வட்டாரத்தில் வாழைப்பழம் என்னவாகப் பார்க்கப்படுகிறது என்பதை சற்றே அவல நகைச்சுவையாக அறிமுகப்படுத்தி கதை தொடங்கினாலும் தொடர்ச்சியாக ஆபிதீன் முன்வைக்கும் சின்னத்தா, சின்னம்மா, யூனுஸ் மாமா போன்றவர்களின் அசல் வாழ்வு அசத்துகிறது. கண் சிமிட்டாமல் நீலப்படம் பார்த்துவிட்டு, மாட்டிக்கொண்டதும் கால் மரத்துப்போனதால் டிவியை ஆஃப் செய்ய முடியவில்லை எனும் கதாபாத்திரம், பாட்டு படிக்கிறதோ இல்லையோ அதன் முள்ளை திருகிக்கொண்டே இருக்கலாம் எனும் சின்னம்மாவின் பரிசு ரேடியோவை விளக்கும் விதம், எல்லாக் கடிதமும் பணம் பணம் அறிய மனம் என்றுதான் ஆரம்பிக்கிறது என்று சொல்லிப்போகும் அயல் நாட்டில் பொருள் நிமித்தமான பிழைப்பு என சுவாரசியத்துக்குப் பஞ்சமில்லாத எழுத்து நடை. சின்னத்தாவின் மீது விழும் பெரும் பழி, சாதி சனத்திலிருந்து தள்ளிவைப்பு, ‘இவனுங்களுக்கு மரணமே கெடையாது’ என்ற நினைப்பில் வாழும் மனிதர்கள், வாதம் வந்து வீழும் யூனுஸ் மாமா, எல்லா பழி பாவங்களை மறந்து உறவின் வீடுகளுக்குச் செல்லும் மனப்பாங்கு எல்லாம் கண் முன்னே காட்சிகளாய் விரிகின்றன. இஸ்லாமியர்களின் சுக துக்கங்களில் பங்குகொண்டு நீள் பெருமூச்சு விடும் வகையில் எழுதப்பட்டிருக்கும் ‘வாழைப்பழம்’ எவ்வித இடையூறுமின்றி மனதில் வழுக்கிச் செல்கிறது.
முஹம்மது யூசுப்பின் ‘மாடசாமி மைனி’ கதை இன்னொரு ஆச்சரியம். மாடசாமி என்பது ஒரு பெண்ணின் பெயர் என்பதே கதையை மேலும் வாசிக்க ஆவலைத் தூண்டுவதாய் உள்ளது. சின்னச் சின்னதாய் சுவாரசியம் சேர்த்துக்கொண்டே போய் கதை பாரமாய் முடிகிறது. தெரிசை சிவாவின் ‘அண்டி’ கதை அதிகம் பேர் அறிந்திராத நாகர்கோவில் வட்டாரத்தின் படைப்புச் சோறு வழியே விரிகிறது. அண்டி, ஆதிமூலபெருமாள் ஆவதை கதாசிரியர் வழி சொல்லாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். எனக்குப் பசிக்கல என்பதன் மூலம் எல்லாவற்றையும் விலக்கும் அண்டி, அவ்வரியிலே ஆதிமூலபெருமாளாக மாற தனியே குறிப்பு எதற்கு? ஆனாலும் தொகுப்பில் ரசிக்கத்தக்க கதை ‘அண்டி’. நந்தகுமாரின் ‘தாடகை’ கதையாகவும் கதை சொல்லலிலும் புதிதாக இருக்கிறது. அய்யனார் விஸ்வநாத்தின் ‘முள்ளம்பன்றிகளின் விடுதி’யும் முழுக்க ஃபேண்டசித்தனமான வாசிக்க சுவாரசியமான கதையே. பீர் முகம்மது ஷாஜஹானின் ‘முய்ஸ்ஸா’ சபாஷ் சொல்லவைக்கும் விறுவிறு கதை. நாவலுக்குண்டான சஸ்பென்ஸ் த்ரில்லரை சிறுகதையாக்கியதில் வெல்கிறார் ஆசிரியர். வாசிக்கத்தூண்டும் தொகுப்பு இந்த ஒட்டக மனிதர்கள்.