உதகை: சுற்றுலா மற்றும் தேயிலை நீலகிரி மாவட்டத்தில் அடையாளங்கள். சுற்றுலாவில் முக்கிய இடம் பிடிப்பது நீலகிரி மலை ரயில். இந்தியாவிலேயே பல் சக்கரம் கொண்ட ஒரே ரயில் பாதை, கடந்த 1898-ம் ஆண்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நிறுவப்பட்டது. பின்னர் 1908-ம் ஆண்டு உதகை வரை இப்பாதை நீடிக்கப்பட்டது. நூற்றாண்டை கடந்த மலை ரயிலுக்கு கடந்த 2004-ம் ஆண்டு ‘யுனெஸ்கோ’ நிறுவனத்தின் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டது.
நூறு ஆண்டுகளை கடந்து இயங்கி வரும் நீலகிரி மலை ரயில் உலக சுற்றுலா பயணிகளின் உள்ளத்தை கொள்ளை கொண்டுள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலம், வெளி நாடுகளில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா வரும் பயணிகள், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை இயக்கப்படும் நீராவி இன்ஜின் பொருத்தப்பட்ட மலை ரயிலில் பயணிப்பதை தங்களின் முக்கியப் பொழுதுபோக்காக கொண்டுள்ளனர்.
இந்தியாவில் உள்ள ஒரே பல்கரம் கொண்ட இந்த ரயிலில் பயணம் செய்தால் இயற்கை சூழ்நிலையை அனுபவித்தபடி 208 வளைவுகள் வழியாக வளைந்து, நெளிந்தபடி, 16 குகைகளுக்குள் புகுந்து வெளியேறியபடி, 250 பாலங்களை கடந்து 5 மணி நேரம் அருமையான பயணம் செய்தால் உதகை வரும். இந்த இனிமையான அனுபவத்தை பெற, ஜில்லிடும் குளிரை அனுபவிக்க உலகம் முழுவதும் இருந்து வருகின்றனர்.
இதையொட்டி உதகைக்கு பயணம் செய்தால் இந்த மலை ரயிலில் பயணம் செய்யலாம் என்பது போய், இந்த மலை ரயிலில் பயணம் செய்வதற்காகவே உதகைக்கு பயணம் செய்பவர்களும் இருக்கிறார்கள்.
இந்நிலையில், மலைகளுக்கு நடுவே நீலகிரி மலை ரயில் செல்லும் அழகான காட்சியை தெற்கு ரயில்வே வீடியோவாக வெளியிட்டுள்ளது. எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள ரயிலின் பிரம்மிப்பூட்டும் வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளை கடந்து சென்றுள்ளது.
Chasing sunlit dreams: Watch as the Nilgiri Mountain Rail glides gracefully through the golden rays, painting a picture-perfect scene against the majestic mountains.
#SunlitSplendor #MountainAdventure #NMR #SouthernRailway #NilgiriMountainRailway #AdventureTravel pic.twitter.com/QiXJoeUTkb— Southern Railway (@GMSRailway) May 31, 2024