பாச்சாவின் வம்பும் பதறிய ட்ரம்பும்


பைக் பாச்சாவின் கேள்விக் கணைகளால் கெட்ட கோபம் அடைந்திருக்கும் அகில இந்தியத் தலைவர்கள், கட்சி வேறுபாடு பார்க்காமல் பாச்சாவின் கோக்குமாக்கு கொஸ்டின்ஸ் பற்றி மற்ற தலைவர்களுக்கும் பற்றவைத்துவிட்டனர். இதனால், யாரைச் சந்திக்கச் சென்றாலும் வானத்திலேயே தடுத்து, வந்த வழியாகவே அனுப்பிக்கொண்டிருந்தனர் குண்டர்கள்… ஸாரி தொண்டர்கள்! 
சிலர் பறக்கும் ஆட்டோவிலேயே துரத்தத் தொடங்கியதைப் பார்த்ததும் ஆச்சரியப்படுவதா அதிர்ச்சியடைவதா என்று பரிதவித்தான் பாச்சா. அவனும் மனுஷன்தானே! கட்டிவைத்து உரித்தால் கண்ணீரை அடக்கிக்கொண்டு சிரிக்க அவன் என்ன மாணிக் பாஷாவா, வெறும் பாச்சாதானே? 

சரி ஏதோ உள்நாட்டு சதி. கொஞ்சம் வெளிநாடுகளுக்குப் போய்தான் பார்ப்போமே என்று முடிவெடுத்தான். ஆசிரியரும் பச்சைக் கொடி காட்டி பறக்கவைத்தார்.

முதன்முறையாக கண்டம் கடக்கும் மகிழ்ச்சியுடன் மேகக் கூட்டங்களுக்கு நடுவே ஜாலியாகப் பறக்கத் தொடங்கினான் பாச்சா. ஐரோப்பாவை நெருங்கிக்கொண்டிருந்தவன், எதிரே பறந்துவந்த உருவத்தைப் பார்த்ததும் பதறி வானிலேயே ஸ்டாண்டு போட்டு நின்றான். நெருங்கிவந்த உருவத்தைப் பார்த்தால் அது பறக்கும் மனிதன் ஃபிராங்கி ஸப்பாட்டா. “ஸ்ஸ்…அப்பாடா நீங்கதானா... 
என்னவோ ஏதோனு பயந்துட்டேன்” என்று அவருடன் சம்பாஷிக்கத் தொடங்கினான். ஃபிராங்கி டெவலப் பண்ணி வைத்திருக்கும் ‘ஃப்ளைபோர்டு’ பற்றி பாச்சாவும், இவன் வைத்திருக்கும் பறக்கும் பைக் பற்றி அவரும் பல விஷயங்களை விசாரித்தறிந்துகொண்டனர்.  

பிரெஞ்சுக்காரரான பிராங்கி ஏதோ சொல்லப்போக, “என்னா தமாஷா பேசுறாரு பாருய்யா” என்று வடிவேலு கணக்காக வாய் நிறைய சிரித்தான் பாச்சா. அவர் டக்கென்று சிங்கமுத்தாகி, “சரி… இது லிட்டருக்கு என்னா குடுக்குது?” என்று ஆரம்பிக்க, “ஆஹா... இது அதாச்சே” என்று எச்சரிக்கை அடைந்து இடத்தைவிட்டு எஸ்கேப் ஆனான்.

x