சிக்குனா சீக்கிரம் விடமாட்டாங்க!


ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

“ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி”ன்னு சொல்லுவாங்களே கேட்டுருக்கீங்களா... எங்க வீட்டுல அந்த கேரக்டர் நான்தான்.

எங்க வீட்ல ஏதாச்சும் விசேஷம்னா நமக்குத்தான் ஒரு அடிமை இருக்கானேனுட்டு எல்லாத்துக்கும் என்னையத்தான் பார்ப்பாங்க. “வீட்டுக்கு வர்றவங்களுக்கு ரூம் போடணும், ரயில்ல வரவங்கள யார் போய் அழைச்சுட்டு வர்றது...”னு பேச்சு ஆரம்பிக்கிறப்பவே என் முகத்தைதான் பார்ப்பாங்க. ராத்திரி 2 மணிக்கு ட்ரெய்ன் வரும். அதையெல்லாம் பத்தி கொஞ்சமும் யோசிக்காம, “அதெல்லாம் இவரு போயி பிக்கப் பண்ணிப்பாரு”ன்னு ஈவிரக்கம் இல்லாம சொல்லுவாங்க வீட்டம்மா. ஏதாச்சும் கேட்டா, “காருலதானே போறீங்க... அதுக்கு எதுக்கு இப்புடி வெளக்கெண்ணெய குடிச்சாப்ல மூஞ்சிய வச்சுகிட்டு”ன்னு கமென்ட் வரும்.

ஒன்பது மணிக்கெல்லாம் சோத்தைப் போட்டு காருக்கு அனுப்பிருவாங்க. எங்க வீட்டுக்கும் ரயில்வே ஜங்ஷனுக்கும் 12 கிலோ மீட்டர் தூரம். என்னோட நேரத்துக்கு எப்ப போனாலும் ரயில் ஒன்றரை மணி நேரம் லேட்டாதான் வரும். அதுக்காக லேட்டாவும் போகமுடியாது. நம்ம ஜாதகத்துக்கு அன்னிக்கின்னு பார்த்து கரெட்க் டைமுக்கு வந்து தொலைக்கும். இதுக்குப் பயந்தே முன்னாடியே ஓடிடுறது. ரயில்ல வர்றவங்களும் ஒண்ணா சேர்ந்து வரவும் மாட்டாங்க. எட்டுப் பேரும் ரெண்டு ரெண்டு பேரா ஆளுக்கொரு பெட்டியிலருந்து இறங்கி வருவாங்க. எல்லாரையும் ஒரு இடத்துக்கு கொண்டாந்துட்டு, “சரி, கெளம்பலாமா?”ன்னு கேட்டா போச்சு. வீட்டுக்கு வந்ததுமே, “உங்க வீட்டுக்காரரு கால்ல சுடுதண்ணிய கொட்டிட்டு நிக்கிறாருடி”ன்னு போறபோக்குல போட்டுக் குடுத்துருவாங்க.

x