“இப்படிச் செய்வது மதுரைக்கு அழகல்ல” - 125 ஆண்டு பழமையான மேலமடை சாவடி கட்டிடம் இடிப்பு!


மதுரை: சாலை விரிவாக்கத்துக்காக மதுரையில் 125 ஆண்டுகள் பழமையான மேலமடை சாவடி கட்டிடம் இடிக்கப்பட்டது. பல்வேறு தரப்பு மக்களின் 120 ஆண்டு கால நினைவுகளை தாங்கி நிற்கும் மேலமடை சாவடி கட்டிடத்தை இடிப்பது பண்பாட்டு தலைநகரமான மதுரைக்கு அழகல்ல என்று இயற்கை பண்பாட்டு மையமும், சூழலியல் ஆர்வலர்களும் அதிருப்தியடைந்துள்ளனர்.

மதுரை அண்ணாநகர் அருகே மேலமடை பகுதியில் வண்டியூர் கண்மாய் கரையில் மேலமடை சாவடி அமைந்துள்ளது. பழமையான சுண்ணாம்பு கலவைகளால் செய்யப்பட்ட பெரிய தூண்கள், விலையுயர்ந்த தேக்கு மரங்களை கொண்ட மேற்கூரை என பழமையான கட்டிடக் கலை அமைப்பை கொண்ட மேலமடை சாவடி 1905-ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது மேலமடை வழியாக மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. இந்த பணிக்காக, மேலமடையில் சாலையை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத் துறை தொடங்கி உள்ளது.

அதனால் இங்குள்ள சுமார் 125 ஆண்டு கால மரபுச் சின்னங்களில் ஒன்றாக அறிவித்து பாதுகாக்க தகுதி வாய்ந்த மேலமடை சாவடி கட்டிடத்தை சாலை விரிவாக்கப் பணிக்காக நெடுஞ்சாலைத் துறை இடிக்கும் பணியை நேற்று தொடங்கியது. இன்று 80 சதவீதம் இடித்து கட்டிடம் அப்புறப் படுத்தப்பட்டது.

பழமையான சாவடி கட்டிடத்தை இடிக்கும் பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டிய அதிகாரிகள், நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், பழமையான கட்டிடங்கள், கோயில்கள், தளங்கள், மரங்கள் பாதிக்கப்படாத வகையில் சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மதுரை இயற்கை பண்பாட்டு மையமும், சூழலியல் ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து மதுரை இயற்கை பண்பாட்டு மையத்தை சேர்ந்த தமிழ்தாசன் கூறியது: முகம் தெரியாத ஒருவருக்கு உதவும் தமிழர்களின் பண்டைய அறச்செயல்பாடுகளில் ஒன்றாக சாவடிகள், சத்திரங்கள் செயல்பட்டு வந்ததை வரலாற்றில் நாம் காண முடியும். வழிப்போக்கர்கள் தங்கி இளைப்பாறி செல்லும் இடமாக சாவடிகள், சத்திரங்கள் தமிழ்நாட்டில் விளங்கின. அவ்வகையில் மேலமடை வழியாகச் செல்லும் வழிப் போக்கர்கள் தங்கி இளைப்பாறவும், ஊர்க்காரர்களின் குறை, நிறைகளை பேசி தீர்க்கும் இடமாகவும், ஊர் கூடி முடிவெடுக்கும் சபையாகவும் மேலமடை சாவடி விளங்கியது.

தற்போதும் உழைக்கும் ஏழை எளிய மக்கள் இளைப்பாறும் காத்திருப்புக் கூடமாக மேலமடை சாவடி இன்றும் பயன்பட்டு வருகிறது. இதுவரை மேலமடை பேருந்து நிறுத்தத்தில் எந்த ஒரு நிழற்குடை கட்டிடங்கள் அமைக்கப்படவே இல்லை. காரணம் மேலமடை சாவடி 120 ஆண்டுகளாக அந்த பணியை செய்து வருகிறது.

பல்வேறு தரப்பு மக்களின் 120 ஆண்டு கால நினைவுகளை தாங்கி நிற்கும் மேலமடை சாவடி கட்டிடத்தை இடிப்பது பண்பாட்டு தலைநகரமான மதுரைக்கு அழகல்ல. மேலும், வண்டியூர் கண்மாய் கரையில் மேலமடை சாவடி அருகே பழமையான விநாயகர் கோயிலும், கோமதிபுரம் புளியமரத்து பெருமாள் கோயிலும், 200 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான படித்துறை ஆலமரமும் உள்ளது.

அதனையும் மதுரை மாவட்ட நிர்வாகம் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மஹால் உள்ளிட்டவை மதுரையின் வரலாற்று சின்னம் என்றால், மேலமடை சாவடியும், புளியமரத்து பெருமாள் கோயிலும், படித்துறை ஆலமரமும் மேலமடையின் வரலாற்று அடையாளங்கள் இல்லையா? அவற்றையும் பாதுகாக்க வேண்டாமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

x