அசல் மனிதர்கள் பற்றிய அதி புனைவு 


கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in

கனாத்திறமுரைத்த கதைகள்
சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர்: சித்ரன்
வெளியீடு: யாவரும்
தொடர்புக்கு:
யாவரும் பதிப்பகம்
சென்னை.
போன் - 9042461472
விலை - 140 ரூபாய்

சித்ரனின் முதல் தொகுப்பான கனாத்திறமுரைத்த கதைகளில் 7 கதைகள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன அதில் ‘கொனட்டி முத்தன்’ சித்ரனின் முத்திரை பதிக்கும் கதையாக அமைந்துள்ளது. முத்து என்ற இயற்பெயர் அமைந்த கொனட்டி முத்தனுக்கு இயல்பாகவே பெண்களின் உடல்மொழி அமைந்திருக்கிறது. பேச்சிலும் பெண்மை வெளிப்பட முத்துவுக்கு கொனட்டி முத்தன் என்ற பட்டப்பெயர் அமைந்துவிட்டது. கூழாங்கற்கள் அள்ளும் வேலை பார்க்கும் முத்தனுக்கு உடன் வேலை பார்க்கும் அமராவதி மீது காதல். இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனாலும் ஊராரின் கேலிப்பேச்சு நின்றபாடில்லை. ஆண் குழந்தை பிறந்தபின்பும் ஊர் அமராவதியின் நடத்தையைச் சந்தேகப்படுகிறது. மகனோ தந்தையின் பாசத்தில் வளர்கிறான். ஊர் தன்னை பொண்டுக சட்டி என்று கூறுவதை வெறுக்கிறான் மகன். பள்ளியில் நடக்கும் கேலிச்சண்டையினால் ஆத்திரத்துடன் தன் தகப்பனிடம் ‘ நீ ஏன் பொம்பள மாதிரி நடக்குற...பேசுற’ என்று கேட்க, மனசொடிந்து போகிறான் முத்தன்.சிறு விபத்தில் கழுத்து உடைந்து படுத்த படுக்கையாகிறான். கணவனின் துயர் நீக்க அமராவதி எடுக்கும் முடிவு அதிர்ச்சியூட்டுகிறது.
ஒரு கதை, ஒரு வாழ்வு தன்னைத்தானே எழுதிப்போகாமல் எழுத்தாளரின் கையில் லகான் கொண்டு இயங்குவதற்கு இக்கதை சிறந்த உதாரணம். தன் உடலில் ஏறியிருக்கும் மென்மையை முத்தன் அழிக்க முற்படும் காட்சிகள், எச்சூழலில் எப்படி முத்தனின் மகன் வளர்கிறான் என்பதை விளக்கியிருக்கும் விதம், கதையின் முடிவு என பிரமாதமான அனுபவத்தைத் தந்திருக்கிறார் எழுத்தாளர். கொனட்டி முத்தனுக்கு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் எழுதப்பட்டிருக்கும் ‘தூண்டில்’ சித்ரனின் மீதான எழுத்து நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது.
கதைக்குள் சின்னச் சின்னதாய் பல கதைகள் சொல்லிப் போகிறார் சித்ரன்.‘ஐயனார் புரம்’ கதையில் வெடிவிபத்தில் துண்டாகும் கனகராஜின் விரலைக் கவ்விக்கொண்டு ஓடும் செவலை நாய், கனகுவினாலே கொல்லப்பட்டதும் அதன் வாய் காவ்விய விரல் பொருத்தி ஏகலைவன் வில் வித்தை பயில்வதாய் எழுதுவதெல்லாம் மந்திர எழுத்து நடை. பெரும்பாலான கதைகளின் முடிவை இவ்வாறாகத்தான் நிகழ்ந்திருக்கலாம் என்பது போல் எழுதியுள்ளார். அது சித்ரனின் தனி எழுத்துரு எனவும் கொள்ளலாம். அதே சமயம் சொல்லியும் சொல்லாமல் சொல்லிச் சென்றிருக்கும் கதைகளின் முடிவு வாசகரால் யூகிக்க முடியாதவாறு அமைந்துள்ளது சிறப்பு. ஆழ்மனத்தின் அலறல்களைக் கதையாக்கியிருக்கும் தொகுப்பின் தலைப்புக் கதை எழுத்தாளர் சித்ரனின் இன்னொரு சிறப்பான துணிச்சல் முயற்சி. 

x