பேசிக்கிட்டாங்க...


திருச்சி
துவாக்குடி பஸ்ஸில் பெரியவரும் மாணவரும்...
``ஏம்ப்பா தம்பி!  ஸ்கூலுக்குப் போனா,  குளிச்சி சுத்த பத்தமா போறது இல்லியா? குப்புன்னு வாடை வருதே!''
``இது பாடி ஸ்ப்ரேங்க!''
``இதை வேற வெக்கப்படாம சொல்ற பாரு... பாடிக்கு ஸ்ப்ரே பண்ண வேண்டியதை, ஆம்பளப் பையன் நீ பூசிக்கிட்டு வர்றியேப்பா... என்ன படிக்கறீங்களோ என்னவோ?''
தஞ்சாவூர், தே.ராஜாசிங்ஜெயக்குமார்

சீர்காழி 
ரயில்வே பிளாட்பார்மில் கணவனும் மனைவியும்...
``ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ட்ரெயின் வர்ற சத்தம் கேட்குது... அன் ரிசர்வ் கம்பார்ட்மென்ட் இங்கேதான் நிக்குமாம்... நீங்க பேக்கை எடுத்துகிட்டு ரெடியா இல்லாம அலட்சியமா மொபைல்ல பேசிக்கிட்டு  நிக்கறீங்க...''
``நீ ஒண்ணும் பதறாத... ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல்கிட்டேதான் பேசிக்கிட்டு இருக்கேன்... ட்ரெயின்ல நாம ஏறின பிறகுதான் எடுப்பாங்க... டக்குன்னு எடுத்துட்டா இன்ஜின் டிரைவரையும், ஸ்டேஷன் மாஸ்டரையும் வேலையை விட்டு சஸ்பெண்ட்  பண்ண வெச்சிடறேன்...''
``இந்த நக்கலுக்கு ஒண்ணும்  குறைச்சலில்லே...  இப்படி வாயால வடை சுட்டே காலத்தை ஓட்டிருங்க..!''
சீர்காழி, வி.வெங்கட்

நாகர்கோவில் 
மதுரை செல்லும் பஸ்ஸில் பெரியவரும் இளைஞரும்... 
``தம்பி... நான் ஜன்னல் ஓரமா உட்காரட்டுமா?''
``ஏன்... அந்தப் பக்கம் என்ன பாம்பா இருக்கு?''
``இல்லப்பா...நான் வெத்தல போடுவேன். அதான்...''
``ஓகோ...நீங்க எல்லா கெட்டப் பழக்கத்தையும் பழகி வெச்சுருப்பீங்க... நீங்க கேட்டதும்  சொகுசான இடத்த நாங்க உங்களுக்கு விட்டுத் தரணுமாக்கும்?''
``ஏதோ பழகித் தொலைச்சிட்டேன்பா.''
``ஒண்ணும் பிரச்சினை இல்ல... நீங்க இந்தப் பக்கம்  வாங்க... ஜன்னல் ஓரமா  சாய்ஞ்சி  தூங்கலாம்னு நெனச்சேன்...இப்ப  உங்க தோள்ல சாஞ்சி  தூங்கிட்டாப் போச்சு.''
``அடுத்தவங்க தோள்ல சாய்ஞ்சு இம்சை பண்றது அதைவிட கெட்டப் பழக்கம்ப்பா!” 
(இருவரும் சிரித்து சிநேகிதர்கள் ஆகிறார்கள்) 
பனங்கொட்டான் விளை, மகேஷ் அப்பாசுவாமி 

கோவை 
ரயில்வே ஸ்டேஷனில் ஆட்டோகாரரும் பயணியும்...
‘‘ஏப்பா ஆட்டோ ஜெயில் கேட் வருமா?’’
‘‘போலாம் சார், ஏறுங்க!’’
‘‘எவ்வளவு ரூபா?’’
‘‘அம்பது ரூபா..!’’
‘‘சரியா சொல்லு, அம்பதா, எம்பதா?’’
‘‘அம்பதுதான் சார்..!’’
‘‘அதில்லப்பா... இப்படித்தான் போனதடவை அம்பதுன்னு சொல்லிட்டு ஒரு ஆட்டோக்காரர் எம்பது வாங்கிட்டார். பார்க்கேட்டுக்கு ‘ஜெயில் கேட்’டுல கொண்டு போய் விட்டுட்டார். அதனால தெளிவா இந்தா இந்த பேப்பர்ல ‘பார்க்கேட் எம்பது ரூபா’ன்னு எழுதிக் கொடு!’’
‘‘அம்பது ரூபாவுக்கு புரோ நோட்டெல்லாம் எழுதிக் கொடுக்க முடியாது, போய்யா?’’ 
(கடுப்புடன் சொல்லிவிட்டு ஆட்டோவைக் கிளப்புகிறார்) 
கோவை, ஒண்டிப்புதூரான்

x