நிழற்சாலை


நுனி நாசியில் உறையும் வெயில்
இரவு முழுதும் குழைத்த சந்தனத்தை
விடியல் முதலே வெயிலென
பூமியின் கன்னங்களில்
பூசத் தொடங்குகிறது சூரியன்.
கண்ணேறு கழிய
கரிய திருஷ்டிப் பொட்டிடும் பாவனையில்
நிழலைத் தடவிவிடுகின்றன மரங்கள்.
இம்மி ஈரமின்றி கொப்பளித்து
வெம்மை விழுங்கி விரையும் காற்று
முன்தினம் பச்சையத்தைத் தின்னக் கொடுத்த
பழுப்பு இலைகளை
போகிறபோக்கில் எத்தித் தள்ளுகிறது.
வெயிலும் காற்றும் நிகழ்த்தும்
வெட்டவெளி காமத்துக்கு
ஏகாந்த மஞ்சம் விரிக்கின்றன
நரைதிரை கூடிக் கிழப்பருவமேகிய
வெடிப்பு நிலங்கள்.
மறுநாளைக்காய் கையசைத்து
விடைபெறும் அந்தியில்
தாமத வருகைக்குக் கோபித்து
செல்லமாய் சிணுங்கும்
அவள் நாசியின் நுனியிலமர்ந்து
அழகாய் உறைகிறது அவ்வெயில்.
- பாப்பனப்பட்டு முருகன்

நீ பேசாத பொழுதுகள்
நீ பேசாத பொழுதுகளில் எல்லாம்
நீ பேசிச் சிரித்த வார்த்தைகளை
மீளுருவாக்கம் செய்து
மென்று அசைபோடுகிறேன்.
அடர் உணர்வில் நீ என்னுள் இறக்கிய
அத்தனை நிறமற்ற சொற்களும்
நெஞ்சில் கதகளி ஆடுகின்றன.
நினைவுகளைத் தாங்கியபடி
பேசித் தீராத பக்கங்களும்
பேசி மாளாத காரணிகளும்
இன்னமும் நிரம்பி வழிகிறது
இருவருக்கும் இடையே.
என் கனவுகளில்கூட
உன் பிம்பங்கள்
வாக்கிய உரையாடலுடனே
வாத்தியம் இசைக்கிறது.
வாழ்நாள் சேமிப்பென்றே உன்
வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கிறேன் நான்
தலைவனாக ஆட்கொண்டு என்னுள்
தடம் பதிப்பது எப்போது?
- பவித்ரா நந்தகுமார்
உள்ளே துரத்தும் வெளியின் குரல்
எதற்கோ பின்னால் நடப்பதாய்
எனக்குள் உணர்வு.
முன்னால் செல்பவர்களுடன்
கைகோக்க முடியவில்லை.
பலர் நடந்த பாதைகள்
குண்டும் குழியுமாகத் தன்னுள்
நீர்த்தேக்கம் கொண்டுள்ளன.
இரவு நேரம் என்பதால்
நட்சத்திரங்களும் என்னோடு
நிலவு சிந்திய வெளிச்சம்
இங்குமங்கும் மரங்களின் நடுவே.
சேற்றில் விழுந்த
மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சம்
மங்கியபடி காற்றில் கரைந்தது.
தூரத்து மின்னலில் இந்நேரம்
தாழை பூத்திருக்குமோ ?
கனவின் விளிம்புகளில் யாரோ
என்னைத் தள்ளிவிடுகிறார்கள்
விழித்ததும் பார்க்கிறேன்
என்னுடன் கைகோக்கக் காத்திருக்கின்றன
அன்றாடத் தேடல்கள்!
- கா.ந.கல்யாணசுந்தரம்
பச்சைய ரகசியம்
ஆமணக்கு நாலு செடி
இரண்டோ மூணோ வாழைக் குருத்து
மளுக்கென்று உடைத்து
கடித்துக்கொள்ளும்
பிஞ்சு வெண்டை கொஞ்சம்
போடுமளவு சிறுதிட்டு.
ஓரத்தில் நின்ற வேப்ப மரத்தடியில்
அமர்ந்துதான்
நடவுக்கு நடுவில்
பழையதும்
வெங்காயமுமாகப் பசியாறுவது.
அழுத்தமான சாய்கிளையில்
குட்டிப் படையெல்லாம் கயிற்றிலாடும்
ஊஞ்சல் ஊஞ்சலென.
இதோ நீதிமன்ற வளாக
வேம்பைப் பார்க்கும்போது
அந்த நாள் கண்ணிலாடுவதைப்போல
ஆடியிருக்கலாம்
பாகத் தகராறில் திட்டு எனக்கேயென
உடன்பிறந்தானை வெட்டுமுன்.
 - உமா மோகன்
துணை நின்றவன்
சிறுகச் சிறுக படிந்த
அடர்ந்த மாசுகளை
நிமிடங்களில்
கழுவி விடுகிறான் வருணன்.
பாலையின் கானலை
நதி என நம்பியவள்
தகித்துப்போய்ப் பருகிக்கொண்டிருக்கிறாள்
தன் மென்னீரையே.
புயல் வீசிய தருணமொன்றில்
கிளையின் ஆட்டத்தில் வேர் உணர்ந்தவள்
அக்கிளையின் மீதமர
மருண்டு நிலம் தொடுகிறாள்.
கயவனே தீர்ப்பைக் கையிலெடுத்து தண்டிக்கிறான்
ஆகாயத்தை மரமென நம்பியவள்
தொடர்ந்து பறக்க யத்தனிக்கிறாள்
அன்பும் வெறுப்பும் மாறி மாறிப் பிரவகிக்க
நெருப்புக் குழியில் நினைவுகளைச்
சாம்பலாக்க உயர உயரப் பறக்கிறாள்
ஆகாயத்தில் முட்டி
நிலை தடுமாறி
வீழ்ந்தவளுக்கு
எரியூட்ட துணை நிற்கிறான்
பஞ்ச பூதங்கள் பார்த்திருக்க
மங்கல நாணேற்றியவன். 
- ஸ்ரீகா
நாம்தான் அவர்களா?
முதல் குரல் அல்ல
எதிர்க்குரல்கூட எழுப்பாமல்
அமைதி காத்தார்கள் அவர்கள்.
மற்றவர்களின்
உண்மை பொருந்திய
எந்தச் சொல்லையும்
கேட்க மறுத்தார்கள்.
கண்முன்னே எது நடந்தாலும்
கடந்துசெல்ல பழகிக்கொண்டார்கள்.
உதவி செய்வதற்கு மட்டுமல்ல
உபயோகிக்கவே
கைகளை தூக்காமல்
விலங்கிட்டுக்கொண்டார்கள்.
பாதத்திற்கும் மண்ணுக்குமிடையேயான
உறவைத் துண்டித்து
கால்களைக் கட்டிப்போட்டார்கள்.
அதிகச் சுமையொன்று
தலையில் உள்ளதாக
மூளையைச் சிந்திக்கவிடாமல்
பட்டினி போட்டார்கள்.
வயிற்றை மட்டும்
அவ்வப்போது
துளி வெற்றிடம் இன்றி
நிரப்பிக்கொண்ட அவர்கள்
பின்பொருநாள்
சுமந்து செல்ல யாருமின்றி
அப்படியே
இறந்தும் போனார்கள்.
- கு.அ.தமிழ்மொழி

x