உத்ரா
uthraperumal@gmail.com
நமக்கு ஒரு பிரச்சினைன்னா வான்ட்டடா வந்து புத்தி சொல்றதுக்குப் பல பேரு இருப்பாங்க. அதுல சிலரோட யோசன நல்லதுல முடியும். சிலர் சொல்றதக் கேட்டா... தேர இழுத்து தெருவுல விட்ட கதையாகிப் பூடும்!
என்னோட நண்பர் ஒருத்தரு இருக்காரு. கிராமத்து ஆளு; என்னவிட வயசுல சின்னவரு. ஆனா, ஆளு ரொம்ப வெவரம். மாம்பழம் வாங்கலாம்னு பழக்கடைக்குப் போனா, “இங்க எல்லாம் வாங்காதீங்க... ரோட்டோரத்துல போட்டு விக்கிறாங்க பாருங்க... அதுதான் கல்லு வைக்காத தோட்டத்துப் பழம்”னு சொல்லி நம்மள அங்க இழுத்துட்டுப் போவாரு. இவருக்கு ஏத்த மாதிரியே அங்க மாம்பழ கடை விரிச்சிருக்கிற மகராசியும், “சார்... தோட்டத்துப் பழம் சார். கக்கண்டா இனிக்கும் சார்...”னு பிட்டுப் போடும்.
அத நம்பி வீட்டுக்கு வாங்கிட்டுப் போனா, ஒரே வசவுதான். “பழமா இது... ஏங்க ஒங்களுக்குன்னே ஒதுக்கி வெச்சிருப்பாங்களாங்க...”ன்னு வீட்டுக்காரி லெஃப்ட் அண்ட் ரைட்டு வாங்குவா. அவளச் சொல்லியும் குத்தமில்ல... கட்டுன பொண்டாட்டி தொட்டு எல்லாமே எனக்கு அப்படித்தான் அமையும்!
இப்டித்தான் ஒரு தடவை எனக்கும் நண்பருக்கும் நல்லா தெரிஞ்ச மனுசன் ஒருத்தர் ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகிருந்தாரு. அவர பாக்க நானும் நண்பரும் போனோம். வெறுங்கையோட போறதானுட்டு கொஞ்சம் பழங்கள வாங்கிட்டுப் போனேன். நண்பர் எதுவும் வாங்காம வெறுங்கைய வீசிட்டு வந்தாரு.