நிழற்சாலை


மழைப் பிரியம்
மழைத் தும்பிகளின் பறத்தலில்
பிரியமுற்ற அப்பெருமரத்தின்
சிறு இலைகள் மீது
கருணையுற்றது காற்று.
தும்பிகளோடு தும்பிகளாய்
சற்றே சிறகாடித் 
தரை தாழ்ந்த
அந்தப் பழுத்த இலைகள் மீது
இப்போது மழை வாசனை.
பசியை மட்டுமே உண்டு
படுத்துறங்கும் அவனின்
கனவில் வர
வாய்க்கப்பெற்ற உணவும்
பசியாகவே அருளப்பட்டதுதான்
வாழ்வின் தனிப்பெருங் கருணை.
சின்னஞ்சிறிய கண்ணாடிச் சிறகுகளை
காற்றில் படர்த்தி
அங்குமிங்கும் மேலுங்கீழுமென
அலையும் தும்பிகளின் ரீங்கரிப்பில் கேட்ட
மேகத்தின் குரலில் கசிந்த
ஈர வாசனையை நுகர்ந்த கணம்
சூல்கொண்ட உன் ஞாபகத்தை ஒத்திருக்கிறது
எனக்கு வாய்த்த இவ்வெளி.
- கோ.பாரதிமோகன்

கனவுகளின் க்ளைமாக்ஸ்
திரைப்படத்தின் காட்சி முடிந்து
அரங்கிலிருந்து வந்தபின்னும்
வாசித்த புத்தகத்தின்
கடைசிப் பக்கம் கடந்து
மூடிவைத்த பின்னும்
ரிமோட் ஆயுதம்கொண்டு
சேனல் வேட்டையாடி
தொலைக்காட்சியை
அணைத்த பின்னும்
அன்றாடம் புழங்கும்
சந்திப்பில் ஆழ விழுந்த
உரையாடல்களைச் சுமந்துவந்த பின்னும்
படுக்கையில் விழுந்து இமைத் திரையிட
காத்திருந்தாற்போல் வந்துவிடுகிறது
காட்சிகளின் தொடர்ச்சி.
சிரிக்க,
அழ,
நடுங்க,
நெகிழ,
ரசிக்க,
வெறுக்க வைத்திடும்
முன்னிரவுக் கனவுகளின் தொடர்ச்சிக்கு
முடிவுரை எழுதிவிடுகிறது
பின்னிரவு உறக்கம்.
- பாப்பனப்பட்டு வ.முருகன்
ஒரு புத்தகம் விரல்களைப் பிடித்திருக்கிறது
எந்நேரமும் கண்ணில்பட்டு
எடுத்து மடியமர்த்த
ஏங்கிக் கிடக்கிறாய்.
பல நூறுத் தேடலுக்குப்
பரிசாக முன்னமர்ந்து
பாரம் பாதி குறைக்கிறாய்.
நடுப்பக்க நுகர்தலுக்குப் பின்னே
தலைப்புக்குச் செல்லும்
கண்களுக்கு
பொறுமை கற்றுத் தந்திருக்கிறாய்.
வரிக்கோடு நீவும் விரலை
அடிக்கோடிட்டு அள்ளித் தந்து
அடையாளம் காட்டப் பழகியிருக்கிறாய்.
கதையோ கருத்தோ
கவனத்துக்குள் ஒட்டி
கலந்துகொள்கிறாய்.
விடையோ வினாவோ
உணர்வுக்குள் புகுந்துகொள்கிறாய்
ஒரு புத்தகத்துக்கு முன்னால்
மண்டியிட்டு மடிந்துவிடுகிறது
மனதின் அழுத்தம்.
- கனகா பாலன்

அது உமணர்களின் காலம்
'உப்பேய்... உப்பேய்... என
அவரின் தனித்துவக் குரலோடு
விடியும் அன்றைய அதிகாலைகள்.
குரல் கேட்ட கணநேரத்தில்
வெண்மை நிரம்பி ஒளிரும் சாக்குமூட்டை
வந்துசேரும் மிதிவண்டியில்.
ஒருபடி உழக்களவு வாங்குவோருக்கு
கொசுறாய்த் தருவார்
இரு கைப்பிடியளவு.
அதனூடே சிலரிடம்
நலமறிதலும் கதைப்பேச்சும் உண்டு.
தானே பாத்திகளில் கடல்நீர் பாய்ச்சி
விளைவித்ததம்மா என்பார்
படியும் படிகங்களைச் சேகரித்த
லாவகம் பகிர்ந்திடுவார்
உப்பள, பேரளங்களின்
வித்தியாசம் உரைப்பார்.
அவர் இல்லாத இந்நாட்களில்
பன்னாட்டு நிறுவன உறையணிகின்றன
சூப்பர் மார்க்கெட் உப்பு பாக்கெட்டுகள்
சொல்வதற்கு இனிப்புக் கதைகள்
எதுவுமின்றி!
- கார்த்திக் பத்ரி
மழையைத்
தைக்கும் தாத்தா
மண் வீட்டு வாசலில்
அண்டாவில் மழை நீரை
சேமித்த தாத்தா
கோணிப்பையால் போர்த்தி
நான் நனையாமல்
பார்த்துக்கொண்டார்.
ஒழுகும் கூரைக்குக் கீழே
குண்டான் வைத்தவர்
வெளியே போகும் என் தலையில்
நீலக் கலர் ஜவ்வுத் தாளில்
தொப்பி செய்து தந்தார்.
தங்கையின் வால்தனத்தில்
முறிந்த குடையை
தாத்தா சீர்செய்தாலும்
நின்றபாடில்லை மழை.
ஒழுகிய குடையினுள்
மழையைத் தைத்துக்கொண்டிருந்தார்.
கான்கிரீட் வீட்டில்
பால்கனியில் நீர் விழுந்து
தொட்டியில் சேகரமாகி
அழகாய்ப் பூத்து வளர்கிறது ரோஜா.
- வீரசோழன் க.சோ.திருமாவளவன்
தரையிறங்கிய வானில்…
வானம் தரையிறங்கியது ஒருநாள்
பாரம் தாளாது.
விரிந்த கம்பளத்தில்
சிதறிக் கிடந்த நட்சத்திரங்கள்
ஒவ்வொன்றிலிருந்தும்
மெளனமாக வெளிவருகின்றன
ஆயிரக்கணக்கான ஆசைகளும்
சொல்லப்படாத கதைகளும்.
தாலாட்டுகளால் நன்றிகளால்
ஒளியேற்றப்பட்ட நிலவோ
பிரகாசித்துக் கிடந்தது
ஒரு மூலையில் கவனிப்பாரின்றி.
வெளிச்சத்தை அருளிவந்த சூரியன்
வெந்தணலாய்த் தகிக்கிறது
கோபமான சாபங்களால்.
துரோகங்களைத் தாங்கவியலா
குமுறல்களால் கருத்து உருளுகின்றன
கணக்கிலடங்கா மேகங்கள்.
வருத்தங்களும் கேள்விகளும்
மழைத் துளிகளாக
சந்தேக விதைகளின் மேல் வீழ்ந்து
செழித்து உயர்ந்து
பூத்துக் குலுங்குகின்றன மரங்களாக.
தீராதத் தேடல் காற்றில் உதிர்ந்து
பாதையை நிறைத்த அம்மலர்களை
பாதங்கள் வருடும்போது
அவற்றில் சில
மனிதர்களால்
உருவானவையாக இருந்தன.
- ராமலக்ஷ்மி
மணி சாரின் உலகம்
கரும்பலகையின் இரு துருவங்களையும்
இணைக்க முயல்வதாய்
எழுதிக்கொண்டேயிருக்கும்
மணி சாரின் கைகள்.
எட்டாம் வகுப்புக்கு மட்டும்
அடிக்கடி சாக்பீஸ் தீர்ந்துபோவதாய்
அலுத்துக்கொள்வார்
பள்ளி உதவியாளர் ஆறுமுகம்.
அச்சு அசலாய் அத்தனை பிள்ளைகளும்
மணி சார் மாதிரியே எழுதுவார்கள்.
தூசு அலர்ஜியால்
ஆஸ்துமாவுக்கு ஆட்பட்டு இறந்தவரது
ஆத்மா சாந்தியடைந்திருக்கும்
தலையெழுத்து முடிந்தாலும்
தன் கையெழுத்துகள்
படித்த மாணவர்களிடம்
பரவிக்கிடக்குமென்று.
- காசாவயல் கண்ணன்

x