பைக் பாச்சாவின் அதிரடி பயணங்கள்!


ஜாசன்

ஆசிரியர் வாங்கித்தந்த பறக்கும் பைக்கில் அகிலமெல்லாம் பறந்து செய்தி சேகரிக்கும் குஷியில் அலுவலகம் வந்துசேர்ந்தான் பாச்சா. அவசர வேலையாக வெளியே சென்றிருந்த ஆசிரியர், மறக்காமல் பாச்சாவுக்கான அசைன்மென்ட்டுகளைத் துண்டுச்சீட்டில் எழுதி அலுவலக செக்யூரிட்டி வசம் தந்துவிட்டுச் சென்றிருந்தார். வந்ததும் வராததுமாகத் துண்டுச்சீட்டுகளை பாச்சாவின் கையில் செக்யூரிட்டி திணிக்க, வண்டியைப் பார்க் பண்ணக்கூட அவகாசமில்லாமல் திரும்பிப் பறந்தான் பாச்சா.
முதலில் டெல்லி. அக்‌ஷய் குமார் போன்ற மூத்த பத்திரிகையாளர்களைத் தவிர சாதா பத்திரிகையாளர்களைச் சந்திப்பதே இல்லை என்று சபதம் எடுத்திருக்கும் பிரதமர் மோடியைச் சந்திப்பதுதான் முதல் அசைன்மென்ட். தன்னைப் போலவே சதா பறந்துகொண்டிருக்கும் சக பட்சி எனும் அளவில் பாச்சாவைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த மோடி, (அடுத்த ‘மன் கீ பாத்’தில் பாச்சா பற்றிப் பேசினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!) கொள்கையைத் தளர்த்தி, பாசத்துடன் தழுவி பாச்சாவை வரவேற்றார். சும்மா சொல்லக் கூடாது, 56 இஞ்ச் 56 இஞ்ச் தான். அவ்வளவு இறுக்கம். “நெஜமாவே கல் நெஞ்சக்காரர்தான் சார் நீங்க…” என்று தமிழில் பாச்சா போட்ட பவுன்சரில் மோடியே ஒரு கணம் ஜெர்க்கானார். “பாச்சா… தூ ச்சோட்டா பச்சா… அபுன் ஸே பங்கா நஹி லேனே கா” என்று முறைத்தபடி அவர் சொன்னதைப் பார்த்து ஆடிப்போன பாச்சா, இந்தியிலேயே அவரிடம் பேசத் தொடங்கினான். அதன் தமிழாக்கம் கீழே:
“அதென்ன ஒரே நாடு ஒரே தேர்தல்… ஒரே அக்கப்போரா இருக்கே மோடி ஜீ?” என்று பாச்சா கேட்க,
“வருஷத்துக்கு நாலஞ்சு தேர்தல் நடத்தி தேர்தல் அதிகாரிகளுக்கு நாக்கு தள்ளிடுது பாச்சா. அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை மட்டும் அவங்களுக்கு வேலை வச்சா போதுமேன்னு ஒரு நல்லெண்ண அடிப்படையில எடுக்கப்போற நடவடிக்கை இது” என்றார் மோடி.
“நல்லெண்ணமா, நன்றிக்கடனா சார்?” என்று தமிழில் கேட்டு சுதாரித்து நாக்கைக் கடித்துக்கொண்ட பாச்சா, “அச்சா ஸாப், ஷுக்ரியா ஸாப்” என்று ஜகா வாங்கப் பார்த்தான்.
காதில் மாட்டியிருந்த மொழிமாற்றக் கருவியைக் கழற்றிய மோடி, கடுமையான முகபாவனையுடன், “பாயியோ அவுர் பெஹனோ… ச்சே, அர்ரே ச்சோட்டு! இன்னா நம்பள் கிட்டே டபாய்க்கிறியா? நம்க்குத் தமிள் புர்யாதுன்னு நென்ச்சிக்கிட்டியா? அமீத்து இப்டிக் கொஞ்சம் உள்ளார வா” என்று அறைக்கு வெளியே இருந்த அமித் ஷாவை அழைக்க, தலைதெறிக்கத் தப்பித்துப் பறந்தான் பாச்சா.
அடுத்து ‘நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்’ அலுவலகம். சொல்லவே மோனையாக அருமையாக அமைந்திருக்கிறதே என்று பெருமிதத்துடன் உள்ளே சென்றவனை, சிவப்புப் பையுடன் வரவேற்றார் நிர்மலா. ‘என்னது, இன்னொரு பட்ஜெட் தாக்கலா?’ என்று குழம்பிய பாச்சாவைப் பார்த்துப் புன்னகைத்த நிர்மலா சீதாராமன், “தம்பி, இதுல ஸ்வீட்தான்ப்பா இருக்கு… எடுத்துக்கோ” என்று அன்புடன் கையில் எடுத்துக் கொடுத்தார்.
“ஆஹா, என்ன ஒரு தாயுள்ளம் மேடம் உங்களுக்கு…” என்று நல்லத்தனமாக ஆரம்பித்த பாச்சா, “அதுசரி மேடம், அரசு வருவாய்னு பட்ஜெட்ல சொன்ன தொகைக்கும், பொருளாதார அறிக்கையில சொன்ன தொகைக்கும் 1.7 லட்சம் கோடி ரூபாய் டிஃபரன்ஸ் இருக்குன்னு வெளில பேசிக்கிட்டாங்களே…” என்று நாரதர் வேலையைத் தொடங்கினான்.
“இப்படியெல்லாம் சீனாவுல போய்க் கேட்க முடியுமா? என்னா கொழுப்பு உனக்கு?” என்று நிதியமைச்சர் சீரியஸாகச் சீறவே, “புறநானூறு பாட்டைச் சொல்லி எதிர்க்கட்சிகளைப் புறமுதுகிட்டு ஓடச் செய்த நிதியரசி நீயே” என்று இம்சை அரசனின் துதிபாடிகள் கணக்காய் ஏதேதோ சொல்லி எஸ்கேப் ஆனான் பாச்சா.
நேரே சென்னைக்குப் பறந்த பாச்சா, கீழே மீடியா மைக்குகளுக்கு மத்தியில் மிரட்டலாகப் பேசிக்கொண்டிருந்த அமைச்சர் ஜெயக்குமார் அருகே தரையிறங்கினான். ஒவ்வொரு கேள்விக்கும் எம்பி எம்பி மைக்குகளை ஒருசேர அமுக்கியபடி ஆவேசமாகப் பதிலளித்துக்கொண்டிருந்தார் அமைச்சர்.
“நிருபர்கள்கிட்ட நீங்க பதில் சொல்லும் பாணியே தனி சார். அப்பப்ப கோபம் காட்டுறீங்க, அங்கங்க வடிவேலு பாணியில காமெடி பண்றீங்க… எப்பிடி சார் இப்பிடி?” என்று முகத்தில் சிரிப்பையே காட்டிக்கொள்ளாமல் சீரியஸாகக் கேட்டான் பாச்சா.
“கத்து வச்ச வித்தையெல்லாம் காட்ட வேண்டிய தருணம் தம்பி இது. அம்மா எங்களை அடக்கி வச்சாங்கன்னா, அதுக்கு ஆயிரம் காரணம் இருக்கும். இன்னிக்கு எடப்பாடி அண்ணா எங்களைப் பேசச் சொல்லி முன்னால அனுப்புறாருன்னா அதுக்கும் ஆயிரம் காரணம் இருக்கும்” என்று தொடர்ந்து பேசியவர், “ஏம்ப்பா, நா சரியாதானே பேசிட்டு இருக்கேன்?” என்றபடியே பாச்சாவை ஒரு சந்தேகப் பார்வை பார்த்தார்.
“சரி, வேலூர்ல இடைத்தேர்தல் வருது. ‘வேலை’யெல்லாம் ஆரம்பிச்சாச்சா?” என்று ‘சிங்கிள் கோட்’டில் பாச்சா பண்ணிய சிலேடையைப் புரிந்து கடுப்பான ஜெயக்குமார், ஏற்கெனவே சுருட்டிய முழுக்கைச் சட்டையை மேலும் சுருட்டிக்கொண்டே முறைக்க, அங்கிருந்து அப்படியே மேல் நோக்கிப் பறந்தான்.
அடுத்துத் தரையிறங்கிய இடம் அறிவாலயம். பெரியார், அண்ணா, அன்பழகன், நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திமுக என்று வரிசையாக எழுதப்பட்ட சொற்களை மனப்பாடம் செய்துகொண்டிருந்தார் திமுகவின் புதிய இளைஞரணிச் செயலாளர் உதயநிதி. “இவ்ளோ பெரிய டயலாக்கை எந்தப் படத்துலயும் பேசலையே… எல்லாம் கேள்விப்படாத பேரா இருக்கே…” என்று சலித்துக்கொண்டு குறுக்கும் மறுக்குமாக நடந்துகொண்டிருந்தவரின் எதிரில் போய் நின்றான் பாச்சா.
“யாருப்பா நீ, அறிவாலயத் தொண்டரா இல்ல அசிஸ்டென்ட் டைரக்டரா?” என்று கேட்டவரிடம் பாந்தமாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட பாச்சா, “ஒரே கேள்விதான் சார் கேட்கணும்” என்றான் அடக்கமாக.
“சரி கேளுப்பா” என்றார் உதயநிதி.
“ஆட்சியைப் பிடிக்க திமுக என்னதான் திட்டம் வச்சிருக்கு? அதை மட்டும் சொல்லுங்க” என்றான் பாச்சா.
“ஐ ஆஃப் தி கட்சி ஆஃப் தி அரசியல் பாய்…” என்று ஆரம்பித்த உதயநிதி, “அதுக்கெல்லாம் என்கிட்ட ஒரு அசத்தலான ஐடியா இருக்கு…” என்று சஸ்பென்ஸ் வைத்த சந்தோஷத்தில் பாச்சாவையே பார்த்தார்.
பாச்சா பாவமாக அவரைப் பார்க்க, உதயநிதி தொடர்ந்தார்.
“அடுத்த படமே அரசியல் படம்தான். அதுல இப்படித்தான் ஒரு பையன், அரசியல்வாதிக்கு மகனா பொறக்குறான். சொந்த உழைப்புல மேல வர்றான். சினிமாவுல சேர்ந்து அசத்தலா நடிச்சு ஆஸ்கர் வரைக்கும் போறான். திடீர்னு தொண்டர்ல்லாம் சேர்ந்து அவனுக்குக் கட்சிப் பதவிய வான்ட்டடா தூக்கிக் குடுக்குறாங்க… மக்களெல்லாம் ஹேப்பியாகி அவனை… சாரி அவங்கப்பாவை முதல்வராக்கிடறாங்க” என்று கண்களில் கனவு மின்னச் சொல்ல, “அய்யோ பாவம் அவர் கனவு... அவர் உரிமை. நாம யாரு நடுவுல” என்று நினைத்தபடி, பறக்கும் பைக்கில் ஐக்கியமானான் பாச்சா!

x