ஸ்கிரீன்சேவரில் அடங்கிய கடலும வயலும


கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in

அம்பட்டன் கலயம்:
கவிதைத் தொகுப்பு
ஆசிரியர்: பச்சோந்தி
வெளியீடு: வம்சி
தொடர்புக்கு:
வம்சி பதிப்பகம்
திருவண்ணாமலை
போன் - 9445870995
விலை- 80 ரூபாய்

‘காய்ந்த வேர்களின் கணுக்களில் சிந்தித் தரையில் பரவிய மூங்கில் அரிசிகளில் ஒன்றுதான் நான்’ என்று தன் அடையாளம் கூறும் பச்சோந்தியின் அம்பட்டன் கலயம் கவிதைத் தொகுப்பு முழுவதும் மண் மற்றும் மலை வாசம். பிழைப்புக்கு நகரம் வந்த ஒருவனின் கிராமம் பற்றிய ஏக்கக் குறிப்புகள் தொகுப்பெங்கும் பசுமையாய் வளமையாய் வறுமையாய் இருண்மையாய் விரிகின்றன. சப்பாத்திக் கள்ளியின் தீண்டலிலெல்லாம் தகப்பனின் ஞாபகம் வரும் கிராமத்துக்காரனின் பயணம், தான் இழந்தவற்றை வலியுடன் பேசுகிறது. பள்ளிக்குச் செல்லும் மகளை சீருடையில் பார்க்க, பள்ளிக்குச் செல்லும்போது டாட்டா சொல்ல பொருள் நிமித்தம் கிராமம் நீங்கிய சேறு குழைத்த தகப்பனின் ஏக்கம் கவிதையாய் விரிகிறது. மீச்சிறு என்ற தலைப்பிடப்பட்ட சின்னஞ்சிறிய கவிதையின் கடைசி வரி அதிர்வும் வலியுமாய் கடக்கிறது. எங்கள் காட்டை ஆக்கிரமித்தீர்களே... நீங்களெல்லாம்... என்ற வண்ணத்துப்பூச்சியின் சாபமாய் ஒலிக்கிறது பச்சோந்தியின் குரல். 

‘மாட்டின் கடைவாயில் ஒழுகும் காட்டுக்கு அம்மாவின் ரத்த வாசம்’ எனும் பச்சோந்தியின் வாழ்வியல்,  மருதமும் மருதம் சார்ந்த அனுபவத்தில் வரப்பெங்கும் சாணமும் சேறும் பச்சை நீரும் அசல் வயலை அச்சு அசலான காற்றுடன் காட்டுகிறது. வெறும் படிமங்களிலும் வர்ணனைகளிலுமாய் எதையும் கூறிச் செல்லாமல் உயிர்ப்பான நிலத்தின் நிறத்தினை கவிதை வழி கடத்துவதில் வெற்றி கண்டிருக்கிறார்.  ‘இருந்துவிட்டுப் போகட்டும்’ என்றொரு கவிதை. ஈழம், தனுஷ்கோடி, இராமேஸ்வரம், மண்டபம் என நெய்தல் ரணத்தைக் கீறிவிட்டுச் செல்கிறது. மருதம் பேசும் பச்சோந்தியின் பச்சைப் பார்வை கடல் பார்க்கும்போது நீலமாய் மாறி அலையடிக்கிறது. அட்டகாசமான உச்சம் தொடும் அற்புதக் கவிதை இப்படி முடிகிறது. ‘ பாவம் அந்தக் கடல் எத்தனை முறைதான் தன் வயிற்றிலடித்துக்கொள்ளும்’ கடல் அளவு விரிகிறது வலி. 

x