கணேசகுமாரன்
கவிதை தனது கட்டுகளைத் தளர்த்தி அல்லது உடைத்துக்கொண்டு வெளியேறி நீண்ட நாட்களாகிவிட்டன. இத்தொகுப்பின் தலைப்பிலிருந்து அச்சுதந்திர மீறல் வாசகருக்குக் கிட்டுகிறது. கனிவின் அளவு, கனிவின் சைஸ் ஆனது கவிஞரின் சுதந்திரம் மட்டுமல்லாது கவிதையின் இக்கால வடிவத்தின் ஒரு பகுதியாகவும் கொள்ளலாம். கிறுக்குத்தனங்களின் வல்லுநன் என்ற கவிதையில் வரும் ‘ஆக்சுவலாக அது நான் நினைக்க வேண்டியது’ என்ற வரியை கவிதைக்குள் எப்படிப் பொருத்திக்கொள்வது என்ற சவால் வாசகருக்கு இருக்கிறது. ஒட்டுமொத்தமாய் ஒரு கவிதை வாசகருக்குத் தரும் அனுபவத்தில் இத்தொகுப்பு அநாயாசமாய் வெல்கிறது எனலாம்.
செல்வசங்கரனுக்கு ஹியூமர் பிரமாதமாய் வருகிறது. அதை துன்பியல் கவிதைகளில் செருகி வாசகரைக் குற்ற உணர்வுக்கு ஆளாக்காமல் அவருக்கு நேர்ந்த ஓர் அனுபவமெனக் கூறி வாசகருக்கு சற்றே புன்முறுவல் கூட்டுகிறார். மண்டையன் என்ற தலைப்பிலான கவிதை பேசும் அரசியலும் கிண்டலும் பிரமாதம்தான். என்றாலும் கவிதையின் கடைசி வரி அருவருத்தபடி உறுத்தும் உண்மையைக் கூறிப்போகிறது. கவிதையில் சரியான இடத்தில் மிகச் சரியாக அமர்ந்தாலும் கெட்ட வார்த்தையைக் கெட்ட வார்த்தையாகத்தானே பார்க்க வேண்டியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இதுபோன்ற சொற்களும் சொலவடைகளும் செல்வசங்கரனின் வட்டார வழக்கில் சகஜமாக புழங்கும் ஒன்றாகக் கூட இருக்கலாம்.
’முடிச்சு’ கவிதையின் போக்கில் அவ்வளவு தீவிரமாக வாசிக்கும்போது சட்டென்று இறுதியில் // யாரென்னை கோபாலகிருஷ்ணனென்று கூப்பிடுகிறார்கள் சப்பாணி என்றுதானே வாய் கிழிய கத்துகிறார்கள்// எனத் திடீர் திருப்பத்தில் கவிதை தன் நிறத்தை அவ்வளவு அழகாக மாற்றுகிறது. அதுபோல்...