மீண்டும் வெவ்வேறு கதைகள்


கணேசகுமாரன்

சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் ஸ்ரீபதி பத்மநாபாவின் மொழிபெயர்ப்பில் சென்ற ஆண்டு இறுதியில் வெளிவந்திருக்கும் தொகுப்பு அதே கதை மீண்டும் ஒரு முறை. அதிகம் அறியப்படாத பிறமொழி கதாசிரியர்களின் அறியப்படாத வாழ்வனுபவங்களை அவர்களின் மொழியிலிருந்து தமிழுக்குக் கடத்துவது அத்தனை சுலபமல்ல. கவிஞராகவும் கதையாசிரியராகவும் வாழ்ந்த ஸ்ரீபதிக்கு அது ஒன்றும் கடினமானதில்லைதான்.

மொழிபெயர்ப்பு நூலினை வாசிப்பதன் சிரமம் என்னவென்றால், கதை நன்றாக இருந்தால் அதன் ஆசிரியரைப் பாராட்டுவதா, மொழிபெயர்த்தவரைப் பாராட்டுவதா என்ற சிக்கல் மட்டும்தான் வாசகருக்கு எழும். ஆனால் வாசிப்பதன் மூலம் கிடைக்கும் உன்னத அனுபவத்துக்கு ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் இருவருமே பொறுப்பேற்பார்கள். அந்த வகையில் கதைகளின் தேர்வும் எவ்விதச் சிக்கலும் நேராமல் வாசகருக்குக் கதை வாசிப்பின் அனுபவத்தைக் கையளித்திருக்கும் ஸ்ரீபதிக்கு கனத்த மனத்துடன் வாழ்த்து அஞ்சலியைச் செலுத்த வேண்டியுள்ளது. சிறந்த மொழிபெயர்ப்பாளரின் இழப்பினை இன்னும் அதிகப்படுத்துகிறது இத்தொகுப்பு.

தொகுப்பின் முதல் கதையான ‘பீஹார்’ பெரும் அதிர்வலையை உண்டு பண்ணுகிறது.// நான் ஒரு பீஹாரி. ஆனால் பீஹார் ஒருபோதும் என்னுடையதாக இருக்கவில்லை// என்ற கதைநாயகனின் வாக்குமூலத்தில் “என் அம்மாவை நீங்கள் குடிலுக்குள் விபசாரத்துக்கு ஆட்படுத்திக்கொண்டிருந்தபோது வெளியில் இருட்டில் இல்லாத அர்த்தங்களைத் தேடியலைந்த இரண்டு கண்கள் நான்’’ என்று போகும் கதை பதற்றத்துடனே தன்னை எழுதிச் செல்கிறது. தொகுப்பின் 15 கதைகளிலும் இதுபோல் அதிர்வு விரவிக் கிடக்கிறது.எழுத்தாளர் இந்து மேனனின் மூன்று கதைகளுமே மூன்று விதம். காலத்துக்கும் மறக்க முடியாத வலியின் அனுபவப் பதிவுகள். திருநங்கையின் மகள், முத்தத்தின் அகராதி என்று மறக்க முடியாத கதைகள்.

x