நிழற்சாலை


கடைசியின் கடைசி
கடைசியாய் மிஞ்சிய
விதை நெல்லும்
உலையேறி கொதித்த
கொடுமையில்
உழவன் நஞ்சையுண்டு
உயிர் துறக்கும் அந்நொடி
நம்மை அருந்தத் தயாராகிறது
நமக்கான நஞ்சு.
- இன்போ அம்பிகா

மனசில் படியும் சித்திரங்கள்

சரியாகக் கரைபடாது மிஞ்சிப்போய்விட்ட
ஹார்லிக்சின் சிறுகட்டி
தம்ளரின் அடியில் பிடித்துக் கிடக்கிறது
நீ சொல்லிச்சென்ற
செய்தியும் அப்படியே
சுரண்டித்தான் கழுவ வேண்டும்.
முகம் பார்த்துப் பேச வசதியாக
நகர்த்திப்போட்ட நாற்காலிகள்
கூடத்தின் இருப்பைக் குலைக்கின்றன.
இருந்தபடி இருந்து
பாராது சொல்லியிருந்தால்
கண்ணிலேறிய தூசிக்கு
அந்தச் சிரமமில்லை.
நகர்த்தும்போது எழும்
கிறீச்சின் மாத்திரைகளில்
மனம் படித்து தொலைக்காதே.
- உமா மோகன்

உலகம் அறியாத வலிகள்
வெள்ளை யானைகளின்
பள்ளத்தாக்கில் குப்பைகளோடு
புதையுண்டது குழந்தையின் ஜனனம்.
நுகர்ச்சி திறனில்
உந்தப்பட்ட நாயொன்று
தோண்டி வெளியேற்றுகிறது மரணத்தை.
ஐந்தறிவு காப்பாற்றியதாக
சிலாகிக்கின்றன
உலகச் செய்திகள்.
போகித்தவன் களித்திருக்க
ஏதுமறியா சிறுமி வலியால்
மேலும் கவல்கின்றாள்.
கிளர்த்திய குப்பைகளின்
வீச்சத்தில் மூச்சு முட்டி
வீழ்ந்து கிடக்கிறாள்
அப்பெதும்பை.
- ஸ்ரீகா

தர்மபதம்
புறப்படத் தயாராக நிற்கும்
பேருந்தினுள்
அழுக்குச் சட்டையுடன்
கையேந்தும் அவன்
வயோதிகனுமில்லை
வலுவில்லாதவனுமில்லை.
உழைக்காமல் ஊனுடம்பை
வளர்ப்பதன் பொருட்டு
தர்மத்தின் தார்மீகத்தைக்
கேலி செய்பவனாகத் தெரிகிறான்.
அவனைக் கவனிக்காத
பார்வைகள்
வேறெங்கோ வெறிக்கின்றன.
தவிர்க்கும் மனிதர்களைச் சபிக்கும்
அவன் உதடுகள்
சாபங்களை உச்சரிக்கலாம்.
அவனைத் தவிர்க்கும்
என் போன்றோர்களைப்
பாவிகளெனப் பார்ப்பதும்
சபிப்பதும் நிச்சயம்
அவன் மட்டுமல்ல!
- பெருமாள் ஆச்சி

கட்டை விரல் தியானம்

அம்மா வாங்கி வரச்சொன்னதை
கடைக்கு முன்பாக நின்று
வாங்குவதற்கு ஆயத்தமாவதற்குள்
வலது கையின் விரல் ஒவ்வொன்றையும்
மடக்கி மனதுக்குள்
சொல்லிக்கொள்ளும் சிறுமியின்
நான்கு விரல்கள்
மடமடவென மடங்குகின்றன.
கடைசிப் பொருளெதுவென
ஞாபகச் சேற்றில் சிக்கிக்கொண்டவள்
மீட்டெடுக்கப் போராடுகிறாள்
கண்களைச் சுருக்கியபடி.
இதற்கிடைப்பட்ட இடைவெளியில்
காத்திருக்கின்றன
ஐந்தாவது பொருளும்
கட்டை விரலும்.
- துரை.நந்தகுமார்

வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்...

என் வீட்டு முற்றத்தில் அழகிய குருவிக்கூடு.
அதில் குருவிகள் இரண்டும்
காதலிக்கும் காலம்
நானும் காதலில் விழுந்தேன்.
குருவி முட்டைகளிட்டு
அடைகாத்து குஞ்சுகளைப் பொரித்து
தாயாகும் காலத்தில்
பாசமுள்ள தாயானேன் நானும்.
மின்மினிகளைக் கூண்டுக்குள் வைத்து
அது குஞ்சுகளைக் காக்கும் காலத்தில்.
பொறுப்புள்ள தந்தையுமானேன்.
இரையூட்டும் காலத்தில்
தாய் தந்தையென
இரட்டை வேடம் ஏற்கலானேன்.
குஞ்சுகளுக்கு சிறகுகள் முளைத்து
றெக்கை விரித்து
பறக்கும் காலத்தில்
சேய்க் குருவியானேன்.
பறத்தலும் ஆகாயத்தை அளத்தலும்
ஆசையற்ற மனமும் அளவான கூடும்
இப்போதெனக்கு சுகமாகிப் போனதில்
என்றைக்கும் குருவியாய் வாழ்தலே
வரமென்றிருக்கிறேன்.

- பாரியன்பன் நாகராஜன்

வாழும் கிணறு

சலசலக்கும் புது மழையின் தண்ணீர்.
அதில் நீந்தித் துள்ளும் மீன்குஞ்சுகள்.
மீன்கள் உறங்கிவிட்டனவா என்று
எட்டிப் பார்த்துச் செல்லும் நிலா.
உட்சுவர் உடைத்து
தளிர்முகம் காட்டும் அரசமரக் கன்று.
அதில் குஞ்சுகளுடன்
கொஞ்சும் குருவிகள்.
ஆழ்ப்புதர்ப் பூக்களையும்
நலம் விசாரிக்கும் வண்ணத்துப் பூச்சிகள்.
நல்ல கிணற்றைப் பாழாக்கும்
உயர்திணை மனிதரைப் போலன்றி
பாழுங்கிணற்றை
வாழும் கிணறாக மாற்றிவிடுகின்றன
அஃறிணைகள்!

- கீர்த்தி

x