கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in
யானை பேரழகு. குட்டியை இழந்த யானையோ பெருந் துயரம். இவ்வாறாகத்தான் தொகுப்பு முழுவதும் அழகும் துயரமுமாய் கவிஞர் கயல் நம்மைக் கூட்டிச் செல்லும் காடு விரிந்துகொண்டே செல்கிறது. கவிஞர் கயலின் கண்களில் வித்தியாசமான கலைடாஸ்கோப் ஒன்று ஒளிந்துள்ளது. மலர்களைப் பார்க்கும் பார்வையில் வெளித்தெரிந்துவிடுகிறது. பக்கத்துக்கு பக்கம் ஏகப்பட்ட மலர்களை அதன் வாசனையுடன் நிறத்துடன் அறிமுகப்படுத்திக்கொண்டே செல்கிறார்.
கொப்பும் குலையுமாகப்
பூக்கள் காய் கனிகளோடு
தாய்மை தளும்ப நிற்கும் ஒரு
மரத்தின் கீழமர்ந்து
அண்ணாந்து பார்த்தால்
எம் மனிதனும்
புத்தன்
எந்த மரமும்
போதி
இவ்வாறாக போதி மரத்துக்கு புது விளக்கம் தருவதோடு புதிதாய் ஒரு புத்தனையும் நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். பாகன் தன்னை நீராட்டும் ஓரங்கள் நசுங்கிய வாளியில் அருவியைத் தேடும் யானையாய் அழிந்துகொண்டிருக்கும் பச்சை ஞாபகத்தை வலிக்க வலிக்கப் பேசுகிறார் கயல். எத்தனையோ பறவைகள் தொகுப்பு முழுவதும் பறந்துகொண்டே இருக்கின்றன.