காலமும் எதிர்காலமும்
ஆசைகளை நிரப்பிக்கொள்ள
காலிக் குடமாய்
காத்திருக்கிறது மனது.
காற்று வரும் குழாயாய்
கேலி செய்கிறது நிஜம்.
பட்டியலிட்டுப் பயணம்
தொடர்கையில்
பஞ்சராக்கி சிரிக்கிறது
சிறு ஆணி.
பதற்ற மனதுடன்
பத்திரப்படுத்தப்படும் கனவுகள்
கண நேரத்தில் களவு போகின்றன
சுவடே இல்லாமல்.
நாளைய மாயையை எண்ணி
இன்றைய மகிழ்ச்சியை
நழுவவிடுகிறது
வாழ்க்கை.
- செந்துறை எம்.எஸ்.மதுக்குமார்
புயல் கடந்த செய்தி
பெரு மழைப்பொழுதொன்றில்
தெருவெங்கும்
விழுந்து கிடந்தன விருட்சங்கள்.
வளர்ந்த புற்றுக்குள்
நசுங்கிய எறும்புகள்
தேங்கிய நீரில் செத்து மிதந்தன.
புதிதாய்ப் பறக்கப் பழகிய காகமொன்று குளிரில் நடுங்கி
ஒதுங்கிக் கிடந்தது.
ஒடிந்த கிளை நடுவே
வால் சிக்கிய வலியில்
அலறித் துடித்தது அணில்.
இருள் சூழ் இரவில்
இனம் புரியாமல் அழுதது
அச்சமுற்ற புறா குஞ்சு.
வீசியெறியப்பட்ட கூடொன்றிலிருந்து
ஆங்காங்கே சிதறிக்கிடந்தன
அடைகாக்கப்பட்ட முட்டைகள்.
வலுவான கட்டிடத்தின்
விசாலமான வரவேற்பரையில்
ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது
புயல் கடந்த செய்தி!
- மயிலாடுதுறை இளையபாரதி
கைவிடப்படும் தெய்வங்கள்
மாநகர வீதிகளில்
பிரக்ஞையின்றிச்
சுற்றித்திரிகின்றன மாடுகள்
இரவு பகல் அறியாமல்.
கவனிப்பவர் யாருமில்லை
குப்பைகளைக் கிளறும் அவை
தங்கள் பசுமையை மறந்தவை
புதியவர்களுக்கு மிரளாதவை
வஞ்சித்த மனிதர்களைத்
துன்புறுத்தாதவை
கலங்கிய குட்டைகளிலும்
நீரருந்துபவை
தன்னினம் மறந்தவை
பிரதிபலன் எதிர்பாராதவை
தேவையின் பொருட்டுத் தேடும்
உரிமையாளரிடம்
சினம் கொள்வதில்லை ஒருபோதும்.
ம்மா என்று குரலெழுப்பவும்
மறந்தேவிட்டன.
கோமாதா தெய்வமாம்...
அவ்வப்போது
பேசிக்கொள்கிறார்கள்
மனிதர்கள்.
- பெருமாள் ஆச்சி