ஞாபகமாய் ஒரு மறதி!


ரிஷபன்

யாராச்சும் எனக்கு எதிர்ல வந்து “என்னைத் தெரியுதா”ன்னு கேட்டா நான் டர்ராகிடுவேன். வேற ஒண்ணுமில்ல...  எனக்கு அவ்ளோ ஞாபக சக்தி! வேண்டாத விஷயம்  எல்லாம் நல்லா ஞாபகம் இருக்கும். தேவையானது மட்டும் அப்பப்ப காலை வாரி விட்டுரும்.

ஏதாச்சும் ஃபங்ஷன்ல உறவோ, நட்போ எதிர்ல வந்து, “என்னத் தெரியுதா... யாருன்னு சொல்லு பார்ப்போம்”னு கேட்டாங்கன்னா அசடு வழிவேன். “ஹிஹி... உங்களத் தெரியாதா?”னு மழுப்பினால், “இந்த டகால்டி வேலைலாம் வேணாம்... ஒழுங்கா மரியாதையா என் பேரைச் சொல்லு”னு சில பேரு என்னோட மெமரி பவர் தெரியாம அழிச்சாட்டியம் பண்ணுவாங்க. அந்த நேரம் பார்த்து என் வீட்டுக்காரி வேற பக்கம் போயிருவா.

பெரும்பாலும் இந்த மாதிரி நமக்கு டெஸ்ட் வைக்கிறதே அவ சைடு ரிலேஷன்தான். நமக்கு டெஸ்ட்ட வெச்சுட்டு, “என்ன... உன் புருசனுக்கு என்னைத் தெரிய மாட்டிங்குது”னு போற போக்குல அவகிட்டயும் போட்டுவிட்டுட்டுப் போயிருவாங்க. இதுக்குன்னே காத்திருந்தாப்ல, “எங்க சைடு ஆளுங்கன்னா உங்களுக்கு ரொம்ப வசதியா மறந்து போயிருமே”ன்னு அவ ஒரு பக்கம் படுத்தி எடுப்பா.

x