கலையாக வாழும் காலோ!


ஜெ.சரவணன்

பெரும்பாலான வரலாற்று நாயகர்கள் தங்களை ஓவியங்களாகவும் சிலைகளாகவும் வடிக்க கலைஞர்களைப் பணியில் அமர்த்துவார்கள். ஆனால், தன்னையே கலையாக மாற்றி, கலைக்குள்ளேயே தன்னை மூழ்கடித்துக்கொண்டு, கலையாகவே இன்றும் வாழ்பவர் ஃப்ரீடா காலோ. 

மெக்ஸிகோவில் 1907-ல் பிறந்தவர். மெக்சிகோ புரட்சியோடு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு வளர்ந்தவர். பெண் பிள்ளையான ஃப்ரீடாவுக்கு சமூகமும் குடும்பமும் கட்டாயப்படுத்தும் ஒழுக்க விதிகளோடு ஒன்றுவது கடினமாக இருந்தது. எல்லாவற்றையும் எதிர்த்து கேள்வி கேட்டார்.  கட்டுப்பாடுகளை அறுத்தெறிந்து சுதந்திரப் பறவையாகச் சுற்றிவந்தார். யார் கண் பட்டதோ, 5 வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டார். 18-வது வயதில் நடந்த ஒரு விபத்து இவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டது.

விபத்துக்குப் பிறகு அவர் எடுத்துக்கொண்ட சிகிச்சைகள், மருந்துகள் என அந்தச் சூழல் மரணத்தைவிடவும் கொடியதாக இருந்தன. தான் அனுபவித்த வலிகள் ஒவ்வொன்றையும், ஓவியமாக வரைந்து தள்ளினார் காலோ. அவை அனைத்திலும் தன்னையே முன்னிறுத்தினார்.  அவருடைய ஓவியங்கள் ஒவ்வொன்றுமே வலிகள் சுமந்திருக்கும். அதேசமயம், உலகில் எந்த ஒரு ஓவியரின் தாக்கமும் இல்லாமல் உலகப் புகழ்பெற்ற ஓவியராக மாறினார். இதுவரை எந்த ஒரு ஓவியராலும் இவருடைய ஓவியங்களின் வகைமையைப் பின்பற்ற முடியவில்லை. அப்படி ஒரு தனித்துவமான படைப்புகளைத் தந்தவர்.  

x