ரிஷபன்
சோம்பேறித்தனம் பட்டுக்கிட்டு வீட்டுல நான் அயர்ன் பண்றதில்லங்க. தெருவுல தள்ளுவண்டி போட்டு அயர்ன் பண்ற அம்மாகிட்டத்தான் வாடிக்கையா என்னோட துணிகள குடுப்பேன். ரெண்டு நாளைக்கு ஒரு தடவையாச்சும் எங்க அபார்ட்மென்ட் வாசலுக்கே வந்து நின்னு, “அயன்ன்ன்ன்...”னு அந்தம்மா அம்சமா குரல் குடுக்கும். அவங்கள மாடிவரைக்கும் ஏறி இறங்கவிடுவானேன்னு, கட்டைப்பையில துணிகள அள்ளித் திணிச்சிக்கிட்டு குரல் கேட்டதும் நானே கீழ ஓடுவேன். “தமன்னா அழைச்சாச்சு... அயன் சூர்யா ஓடறார்...”னு எம் பையன் நக்கல் பண்ணுவான். பெத்தவளும் கைகொட்டிச் சிரிப்பா!
எப்ப துணி குடுத்தாலும், “மறக்காம இன்னிக்கே குடுத்துருங்க... டூட்டிக்கு வேற டிரெஸ் இல்ல”ன்னு சொல்லிட்டுப் போறது எனக்குப் பழக்கம். ஆனா, அந்தம்மா அதுக்கெல்லாம் அசராது. எத்தன வீடு பாக்குது! அன்னைக்கி நிஜமாவே யூனிஃபார்ம் துணி இல்ல. அதனால அழுத்திச் சொல்லிட்டுப் போனேன். டூட்டி முடிஞ்சு வந்ததும், “அயர்ன் துணி வந்துச்சா..?”ன்னு பையன்கிட்ட கேட்டேன். அவன், “அம்மா... தமன்னா வந்துச்சா?”ன்னு குரல் குடுத்தான்.” “வரலையே”ன்னு உள்ளருந்து குரல் வந்துச்சு. அப்ப மணி ராத்திரி பத்து!
இந்த நேரத்துல தமன்னாவ... சாரி, அந்தம்மாவ எங்க போயி தேடுறதுன்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டே தெருவுக்கு ஓடுனேன். ஆள காணோம். தள்ளுவண்டியும் வாங்கி வெச்ச துணிமணிகளும்தான் இருந்துச்சு. எங்கயாச்சும் பக்கத்து அபார்ட்மென்ட்டுக்குத் துணி குடுக்கப் போயிருப்பாங்கன்னு நெனச்சேன். இதுக்கு மேலயும் காத்திருக்கதுல புண்ணியமில்லைன்னு தோணுச்சு. வண்டியில இருந்த என்னோட கட்டைப்பை என்ன பார்த்துச் சிரிச்சுச்சு. வாடா ராஜான்னு அதை எடுத்துக்கிட்டு நடக்க ஆரம்பிச்சுட்டேன்.