ரொமான்டிக் கலைஞனின் புரட்சி ஓவியம்!


ஜெ.சரவணன்

ஓவியக் கலையின் வரலாற்றில் பெரும் புரட்சி செய்தவர்கள் ஏராளமானோர் உண்டு. அவர்களில் யூஜின் டெலக்ராயிக்ஸும் ஒருவர். 19-ம் நூற்றாண்டுகளில் ரொமான்டிக் ஓவியங்களின் பிதாமகர் என்று அழைக்கப்படும் இவரின் வாழ்க்கையே பல மர்மங்களையும் புதிர்களையும் அடக்கியதாக இருந்தது.

ரொமான்டிக் வகை ஓவியங்களை வரைந்த யூஜின் டெலக்ராயிக்ஸ் சில சரித்திர ஓவியங்களையும் வரைந்துள்ளார். ஆனால், அதில் குறியீடுகளை வைத்து வரைவது அவரது தனித்துவமாக இருந்தது. அதனாலேயே அவர் வரைந்த பல ஓவியங்கள் பல்வேறு விவாதங்களையும் சர்ச்சைகளையும் எழுப்பின. அவர் வரைந்த பிரெஞ்ச் புரட்சி ஓவியம் உலகப் புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்றாக மாறியது.

பிரெஞ்ச் புரட்சியின்போது, பிரான்சின் மூவர்ணக் கொடியை ஒரு கையிலும், துப்பாக்கியை ஒரு கையிலும் ஏந்தியபடி மக்களை வழிநடத்தும் சுதந்திர தேவதையின் ஓவியத்தை வரைந்தார். அவர் வரைந்த அந்த ஓவியம் ‘லிபர்ட்டி லீடிங் த பீபிள்’ என அழைக்கப்பட்டது. ஆனால், உண்மையில் அந்தப் புரட்சியையும் போரையும் விமர்சிக்கும் விதமாகவே அந்த ஓவியத்தை அவர் வரைந்தார் எனப் பலரால் கூறப்படுகிறது. ஏனெனில், பிரெஞ்ச் புரட்சி பல ஆண்டுகளுக்குப் போர் நடக்கக் காரணமாக இருந்தது. பிரெஞ்ச் அரசு பெரும் கடனுக்கு ஆளானது. பேரரசர் நெப்போலியன் பிரெஞ்ச் புரட்சியின் விளைவாக உதித்தவர்தான்.

x