சுய அடையாளக் குறிப்புகள்


கணேசகுமாரன்

தொகுப்பின் ஏதோ ஒரு கவிதையில், ‘புனிதம் அழுகிய இரவில்' என்றொரு வரி வருகிறது. கிட்டத்தட்ட அனாமிகாவின் எல்லா இரவுகளும் பகல்களும் புனிதமற்றே கிடைக்கின்றன. ஆனால், அவை வலியத் தன் புனிதத்தைத் தொலைத்துவிட்டு வாசகர் முன் நிற்கவில்லை. தொகுப்பின் முதல் கவிதையில் கிடைக்கும் பெயர்களும் படிமங்களும் வாசகருக்கு வினோத மாயா உலகத்தை சிருஷ்டிக்கின்றன. வாசகர்கள் எல்லாப் பைத்திய முடிச்சுகளுக்கும் தங்கள் மன நிலையைத் தயார்படுத்திக்கொள்கிறார்கள். அவை என்பதே பன்மைதான். அவைகள் என உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் சொல் கவிஞர் சொல்வது போல் முற்றிய பித்து நிலை என ஏற்றுக்கொள்ள முடியாதபடி சில கவிதைகள் கிடைக்கின்றன.

தத்தம்மாவின் டைரிக்குறிப்புகள்- 2 போன்ற கவிதையைப் புரிந்துகொள்ள வாசகரும் சற்றே தன் கவித்துவ வெளியை விட்டு நகர வேண்டியிருக்கிறது. ஆனால், அனாமிகாவின் பலமே வாசகரை இதெல்லாம் பிடிக்கும்தானே என்ற கேள்விக்கு உட்படுத்தி அல்லது இதெல்லாம் பிடித்துதான் ஆக வேண்டும் என்ற நிர்பந்தத்துக்கு ஆட்படுத்துவதுதான்.

மனம் பிறழ்ந்தவள், பைத்தியம், பிறழ்வுக்கான நோய்க்கூறு, மனப் பிராந்தன், ஒழுங்கற்ற ஒழுங்கு, பிறழ் மனவுறுப்பு எனத் தொகுப்பெங்கும் வீசும் பித்து நெடிக்கான எல்லாவற்றையும் வழங்கிவிட்டு, சிலுவை சுமக்க நான் தயாரில்லை என்பதாய் இருக்கிறது அனாமிகாவின் பிரார்த்தனைக் குறிப்பு. சொற்களின் வசீகர வலை கைவசமிருக்கிறது அனாமிகாவுக்கு. அதை ஏதோ வேற்றுகிரகத்தில் வீசி தன் துயரத்தினைத் தீர்க்கும் குளிகையைத் தேட முனைகிறார். பெருந்தச்சன் என்ற கவிதையில் வெளிப்படும் வார்த்தைப் பிரயோகங்களும் சொல்ல வந்த வலியும்தான் அனாமிகாவின் அடையாளமாய் இருந்திருக்க வேண்டும். தொகுப்பின் மிகச் சிறந்த கவிதையென அதைச் சொல்லலாம். தொகுப்பு முழுவதுமே சுய அடையாளக் குறிப்புகளாக மட்டுமே தென்படுகின்றன. அனாமிகா யார் என்பதை வாசகர் அல்லவா தீர்மானிக்க வேண்டும். வீட்டின் முதல் மரணத்தை ஓர்மையில் வைத்திருக்கிற தனது துயரங்கள் எல்லாம் சிற்சில கவிதைகளில் தீர்ந்துவிடாது என்பதைக் கவிஞராக அவர் புரிந்துகொள்ள வேண்டும். மலையை முட்டி மண்டையை உடைத்துக்கொள்ளும் செயலில்லைதான் கவிதை என்பது. ஆனால்...

x