மர்மப் புன்னகை ‘மோனலிசா’


ஜெ.சரவணன்

உலகில் எவ்வளவோ பெண்களை ஓவியமாக வரைந்திருக்கிறார்கள். ஆனால், மோனலிசா ஓவியத்துக்குக் கிடைத்த புகழ் உலகில் எந்தவொரு ஓவியத்துக்கும் கிடைத்திருக்காது. இந்த ஓவியம் தனக்குள் அடக்கி வைத்திருக்கும் மர்மங்கள் எண்ணிலடங்காதவை. இந்த ஓவியத்தை வரைந்தவர் உலகின் தலைசிறந்த ஓவியர்களில் ஒருவரான லியனார்டோ டாவின்சி என்று நம்பப்படுகிறது. ஆனால், அதிலும் பலருக்கும் சந்தேகமே நீடிக்கிறது. இந்த ஓவியத்தின் சிறப்பு என்று பொதுவாக அறிந்திருப்பதெல்லாம், புருவமற்ற பெண் ஓவியம் என்பதும், எங்கிருந்து பார்த்தாலும் மோனலிசா நம்மைப் பார்த்து சிரிப்பதுபோலத் தோன்றும் என்பதும்தான். ஆனால், இதையும் தாண்டி பல விஷயங்கள், மர்மங்கள், கேள்விகள் இதற்குள் ஒளிந்திருக்கின்றன.

சொல்லப்போனால், மோனலிசா என்பது அந்தப் பெண்ணின் பெயரே இல்லையாம். பெரும் இத்தாலிய செல்வந்தரான பிரான்சிஸ்கோ டெல் ஜியாகண்டோ என்பவர் லியனார்டோவிடம் தன் மனைவி லிசா கெரார்தினியை ஓவியமாக வரையச் சொல்லியிருக்கிறார். அந்த ஓவியத்துக்கு மோனலிசா என்று பெயர் வைத்தார். இத்தாலியில் மோனலிசா என்றால் ‘My Lady Lisa’ என்று அர்த்தமாம்.

உலகையெல்லாம் வெல்ல நினைத்த பிரான்ஸ் பேரரசர் நெப்போலியன், மோனலிசா ஓவியத்தைப் பார்த்தே காதலில் விழுந்ததாகவும் கதை உண்டு. மோனலிசா ஓவியத்தில் புருவமில்லாதது பெரிய விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. ஆனால், லியனார்டோ புருவம் வரைந்ததாகவும் அது நாளடைவில் அழிந்துவிட்டது என்றும் அல்ட்ரா டிஜிட்டல் ஸ்கேனின் மூலம் ஆய்வு செய்தவர்கள் சொல்கிறார்கள். மோனலிசா ஓவியம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள Louvre மியூசியத்தில் சுமார் ஒரு மில்லியன் ஓவியங்கள் உள்ளதாம். ஆனால், பார்வையாளர்கள் கடிதம் எழுதுவது மோனலிசாவுக்கு மட்டும்தான். சிலர் மோனலிசாவுக்காகத் தற்கொலையில் கூட ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு வசீகரமான மோனலிசா, ஓவியத்தில் புன்னகை புரிவது போல் தெரிந்தாலும் அது மகிழ்ச்சியான புன்னகையா, சோகத்தின் வெளிப்பாடா என்பதை யாராலும் கண்டறிய முடியவில்லை.பலமுறை மோனலிசா ஓவியத்தைத் திருடுவதற்கான முயற்சிகள் நடந்திருக்கின்றன. அப்போதெல்லாம், புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிகாசோ மீதுதான் அனைவரும் சந்தேகித்தனர். காரணம், அவர் Louvre மியூசியத்தில் உள்ள ஓவியங்கள் சிலவற்றை வாங்கிக்கொண்டிருந்தார்.

x