முனைவர் சுந்தர ஆவுடையப்பன்
“செ ல்ஃபிக்கு தமிழ்ச்சொல் எதுவாக இருக்கும்?”-கையில் செல்போனோடு நெருங்கி வந்து ஒருவர் என்னிடம் கேட்டார். ‘நீங்கள் யார்?’ எனக் கேட்பதற்காக நான் வாயைத் திறந்தேன்; “இருங்க... இருங்க! நீங்க தமிழ்ச்சொல்லைச் சொல்லும்போது ஒரு செல்ஃபி எடுத்துடுறேன். படம் ட்ரெண்டியா இருக்கும்!” என்று சொல்லிக்கொண்டே எனக்கு முன்னால் வந்து என்னை மறைத்து செல்லை நீட்டினார்.
அவர் எடுத்துக்கொண்ட உரிமையைப் பார்த்ததும் லேசாகக் கோபம் கொஞ்சம் மூக்கு நுனி வரை ஏறியது; இருந்தாலும் கண்ணுக்குள் சிவகுமார் பளிச்சென வந்து போனதால் உள்ளங்கையை வைத்து மெதுவாக அழுத்தி கோபத்தை மூக்குக்கு உள்ளேயே திரும்பச் செலுத்திவிட்டேன்!
“சொல்லுங்க...” - பரபரப்புடன் செல் நீட்டிக் கேட்டார். “அதுவா... கைதட்டிப் படம்” என்றேன். நான் சொல்லும்போது கையிலுள்ள செல்லால் ஒரு கிளிக் கிளிக்கிவிட்டு “அதெப்டீ? நமக்கு முன்னே கையைக் கொண்டுபோய், செல்லை உள்ளங்கைக்குள் வைத்து விரலால் தட்டி படம் எடுப்பதால் கைதட்டிப் படம் எனப்பெயரோ?” என்று நக்கீரர் பாணியில் தலையை ஆட்டி ஆட்டிக் கேட்டார்.