நிழற்சாலை


கிணற்றின் கதை

தம் றெக்கைகளின் வேகம் தணிந்து
தாழப் பறந்து வந்துகொண்டிருக்கும்
அந்த வனாந்திரப் பறவைகள்
தாகம் தணிக்கவிருந்த ஊருணிக் கிணற்றை
தூர்த்த செய்தி அறிந்திருக்க வாய்ப்பில்லை.
எனினும் வந்திறங்கிய பறவைகள்
தூர்க்கப்பட்ட கிணற்றைத் தேடியலைந்து
அதன் மேற்பரப்பில் எச்சங்களை இட்டுப்போகின்றன.
அதில் முளைவிட்ட
பெருமரத்தின் தளிர்களில் வரிவரியாய் எழுதியிருந்தது
மரித்துப்போன அந்தக் கிணற்றின் கதை!
              - கு.இலக்கியன்

இரக்கம் விற்பவள்

உப்பிய பையொன்றிலிருந்து
ஊதுபத்தியாய் மெலிந்திருந்த கைகளால்
எடுக்கிறாள் வாசல்தோறும்
சந்தனம் ரோஜா மல்லிகை வாசனை
இது இதுவென.
சட்டென நெருப்பில் புகைந்து
சாம்பலாகும் வாழ்க்கையாயினும்
வாழும்வரை காலூன்றி நிற்க
ஊதுபத்திக்கும் ஓரிடம் தேவையென
வாழ்தல் பொருட்டு அலைந்து திரிபவளின்
உடையெங்கும் ஈரம் வியர்வையாய்.
ஏற்றி வைத்தால் வீடே மணக்கும்
என்பவளின் சொற்களில்
எந்த துர்வாசனையும் இல்லை.
ஆயினும் அவள் பொருட்டு
இரக்கத்தை வாங்கிக்கொண்ட அளவுக்கு
வாங்கிக்கொள்ளவில்லை யாரும்
நறுமணங்களை!
                - கீர்த்தி

நினைவுகளில் வீடுள்ள மனுஷி

வீட்டை வரைந்து முடித்து
எல்லாம் இருக்கிறதா என
ஒருமுறை சரிபார்த்து
முத்தாய்ப்பாக
வீட்டு முகப்பில்
டு லெட் பலகையை வரைந்து
தொங்கவிட்டாள்
வாடகை வீட்டுச் சிறுமி.
        - சாய் மான்யா

சாயலும் சாயல் நிமித்தமும்...

நேற்றைய என் கனவுக்கு
திடீரெனக் கைகள் முளைத்துவிட்டன.
உறக்கத்திலிருந்த என்னை
அது உசுப்பி எழுப்பி
உடன் வருமாறு பணிக்க
வசியம் செய்யப்பட்டவனாக
வாய்மூடி மவுனித்துப்
பின் தொடர்ந்தேன்.
இடையிடையே திரும்பி
என் தொடர்தலை உறுதி செய்தபடியே
நடந்துகொண்டிருந்த அக்கனவுக்கு
எப்போதோ நான்
எழுதாமல் தவறவிட்ட
கவிதையின் சாயல் இருந்தது.
      - பாப்பனப்பட்டு வ.முருகன்

ஒரே கதை

ஆயா, தாத்தாவின்
கற்பனை ஊற்றைக்
காலிசெய்துவிட்டன
சின்னத்திரை நாடகங்கள்.
இன்று தொலைக்காட்சித் தொடரின் முன்
கால்நீட்டி அமர்ந்திருக்கிறாள்
ஒரு நாளைக்கு
ஒரு கதை சொன்ன ஆயா.
ஓராண்டாய்
சலிக்காது பார்க்கிறாள்
ஒரே கதையை.
       - கு.அ.தமிழ்மொழி

பாலை நிலத்தில் அன்பின் ஈரம்

மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்
என்ற வானிலை அறிவிப்பு வந்த அன்றுதான்
நீயும் நெடுந்தொலைவிலிருந்து
நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருந்தாய்
மழையோ இடியுடன் கூடிய மழையோ
வழக்கம் போலவே பொய்த்தது.
பாலை நிலத்தில் நீ தூறிய அன்பின் ஈரத்தில்
துளிர்த்த தாவரங்களின் கிளைகளில்
தினமும் வந்தமர்கின்றன நினைவுக்குருவிகள்.
       - வலங்கைமான் நூர்தீன்

அடைமொழி
அப்படியா இப்படியா
எப்படி இருந்தது என
நாலைந்து சொற்களை நீயே தந்து
வலியினைச் சொல்லுடன்
பொருத்தச் சொன்னாய்.
உச்ச மகிழ்வும் உச்ச வலியும்
அனுபவிப்பவனிடம் அடைமொழியில்லை
எப்போதும் எம் வலி
ஆகாது உம் வலி!
       - விஜிமுருகன்

உங்கள் கற்பனை வளத்துக்குக் களம் அமைக்கும் பகுதி இது. நீங்களும் இங்கே கவிபாட வேண்டுமா...  உடனே, உங்கள் கவிதைகளை kavithai@kamadenu.in என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தட்டிவிடுங்கள். கூடவே, ‘எனது இந்தக் கவிதை இதுவரை வேறெங்கும் பிரசுரமாகவில்லை’ என்ற உறுதிமொழியையும்  இணைத்து அனுப்ப வேண்டும்.

x