காதுலின் பொன் வீதியில்...


எப்போதுலருந்துனு தெரியல. ஆனா, அதைக் கண்டுபிடிச்சப்ப தூக்கிவாரிப் போட்டிருச்சு! என் பக்கத்து இருக்கை அலுவலர் எழுந்து வந்து என்னையத் தட்டினார்.  “ஜி .எம் கூப்பிடறார் பாருங்க”. திடுக்கிட்டு நிமிர்ந்தா எனக்கு எதிரே ஜி. எம்.  நாலஞ்சு தடவை என் பெயரைச் சொல்லி அழைச்சிருக்காரு. நான் கம்ப்யூட்டர்ல கடமையே(!) கண்ணா இருந்ததால அவர் வந்ததை கவனிக்கல. சட்டென எழுந்து “ஸாரி” சொல்லி அவர் கேட்டதுக்கு பதிலும் சொல்லி அவரை அனுப்பிட்டேன்.

அதுவரை காத்திருந்த என் சகாக்கள் என்னை கலாய்க்க ஆரம்பிச்சுட்டாங்க. “என்ன தைரியம்பா உனக்கு... அவரையே நிக்க வெச்சுட்டே..!” என்று எல்லோரும் என்னைச் சீண்டிக்கொண்டிருக்க... ஒரே ஒரு அறிவாளி மட்டும் என்கிட்ட வந்து காதைக் கடிச்சார்.  “தம்பி எனக்கொரு டவுட்டு... உனக்கு காது சரியா கேட்கலியோன்னு...” அவரு சொன்னதைக் கேட்டு அங்கே சிரிச்சதோட விட்டிருக்கலாம். வீட்டுல போய் சொல்லித் தொலைப்பேனா... அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டுப் புள்ள மாதிரி, மனைவிக்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னேன். அவ அசராம சொன்னா... “எனக்கு அதுல டவுட்டே இல்ல பாஸ்... எத்தன தடவ கத்திருப்பேன்... திரும்பியே பார்க்க மாட்டிங்க!” என்றாள்.

நிஜமாவே எனக்கு காதுல பிரச்சினையா... அட கடவுளே... யோசிச்சப்ப அதுக்கு சாதகமாவே பழைய சம்பவங்கள் நினைவுல ஓடுச்சு. ஒரு தடவ டூ வீலர்ல போனப்ப, ஒரு வண்டி மேல மோதியே இருப்பேன்.  “ஹாரன் இவ்ளோ அடிக்கிறேன்... நீ பாட்டுக்கு வந்து மோதற”ன்னு ரொம்ப மரியாதையா அட்வைஸ் பண்ணிட்டுப் போனாரு அந்த வண்டிக்காரரு. அப்ப,  ஹெல்மெட் போட்டிருந்ததால சரியா காதுல விழலையோன்னு நினைச்சேன்.

ஃப்ளாஷ் பேக்கை ஆஃப் பண்ணிட்டு, அழாக்குறையாகக் கேட்டேன். "நிஜமாவே எனக்குப் பிரச்சினையா" அவள் அலட்டிக்காம சொன்னா. “மரியாதையா டாக்டர்ட்ட போயிருங்க" உடனே நான்,  “நீயும் வாயேன்” என்றேன். அரை மனசா ஒப்புக்கிட்டா. ஈ என் ட்டி டாக்டர்கிட்ட போனோம்.

x