புகையிலையில் 4,000+ ரசாயனங்கள்: விழிப்புணர்வு நிகழ்வில் தகவல் @ நெல்லை


திருநெல்வேலி: புகையிலையில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ரசாயன பொருட்கள் உள்ளதாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற சர்வதேச புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

உலக சுகாதார அமைப்பால் சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் மே 31-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மனநலப் பிரிவு சார்பாக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் செவிலியர் பயிற்சி மாணவிகள், மருத்துவ பயிற்சி மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக புகையிலை எதிர்ப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. புகையிலை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கைப் பிரதிகளை கல்லூரி முதல்வர் வழங்கினார்.

நிகழ்ச்சியில், மனநலப் பிரிவு துறைத் தலைவர் ரமேஷ் பூபதி கூறியது: “இந்நாளின் நோக்கம் புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், புகைபிடிப்பதை விட்டுவிட மக்களை ஊக்குவிப்பதும் ஆகும். புகையிலை பழக்கம் இன்றைய இளைஞர்களிடையே கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இதன் காரணமாக, புற்றுநோயால் இறப்பவர்களில் இளைஞர்களும் உள்ளனர். புகையிலை போதை ஒரு இனிமையான விஷம் போல் செயல்படுகிறது.

2024-ம் ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் கருப்பொருள் ”புகையிலை தொழில் தலையீட்டிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது” என்பதாகும். குழந்தைகளை புகையிலை தொழிலில் இருந்து விலக்கி புகையிலையிலிருந்து பாதுகாப்பதே இதன் பொருள். இந்த கருப் பொருளைப் பின்பற்றுவதன் மூலம், சிறு குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் புகையிலைக்கு அடிமையாவதைத் தடுக்கலாம். புகையிலையில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ரசாயனப் பொருட்கள் உள்ளன.

இதிலுள்ள கார்பன் மோனாக்சைடு மற்றும் தார் போன்றவை நுரையீரலின் உட்பகுதிகள் வரை ஊடுருவி புற்று நோய் அல்லது புற்றுநோய்க்கு சமமான வேறு பல நோய்களை உண்டாக்குகிறது. அதிக, ரத்த அழுத்தம், மாரடைப்பு, இருதய தசைகளின் ஒரு பகுதி செயலிழப்பு, நரம்பியல் பாதிப்புகள் என ஏராளமான வியாதிகள் உருவாக்கும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியம், அவசர சிகிச்சை மற்றும் பொது மருத்துவ சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் டாக்டர் ரபி, மனநலப் பிரிவு பேராசிரியர் டாக்டர் ராமானுஜம், நெஞ்சக நோய் பிரிவு மருத்துவர்கள், செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் சுப்புலட்சுமி, மற்றும் செவிலியர் போதகர்கள், செவிலியர் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.