கிராமத்து திருவிழாக்களால் விலை உயர்ந்த பன்னீர் ரோஜா பூக்கள் @ திண்டுக்கல்


கொடைரோடு அருகே சக்கையநாயக்கனூர் பகுதியில் விளைந்துள்ள பன்னீர்ரோஜாப்பூக்கள்.

திண்டுக்கல்: கிராமப்புறங்களில் நடைபெற்று வரும் கோயில் திருவிழாக்களால் பன்னீர் ரோஜாக்களின் விலை உயர்ந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, கொடைரோடு சுற்றுப்புற கிராமப்புற பகுதிகளில் ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பில் பன்னீர் ரோஜா சாகுபடி நடைபெற்று வருகிறது. ஏப்ரல் தொடக்கத்திலிருந்து முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வெயிலின் தாக்கம் இருந்ததால் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, பன்னீர்ரோஜா செடிகளில் விளைச்சல் மிககுறைவாகவே காணப்பட்டது. மேலும் செடிகள் கருகும் நிலையும் ஏற்பட்டது. இதனால் ரோஜா விவசாயிகள் கவலையடைந்தனர்.

வரத்துத் குறைந்தபோதும் விசேஷங்கள் ஏதும் இல்லாததால் கடந்த மாதங்களில் ரோஜாவுக்கு போதிய விலையும் கிடைக்கவில்லை. இதனால் பூ விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு கோடைமழை கனமழையாக பெய்தது. இதனால் கருகத்துவங்கிய ரோஜா செடிகள் துளிர்க்க துவங்கின.

இந்நிலையில், இந்த வைகாசி மாதத்தில் கிராமப்புறங்களில் அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் களைகட்டத் தொடங்கியது. அத்துடன் கோடை மழையால் பன்னீர் ரோஜாக்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கியது எனினும் தேவை அதிகரித்ததால் ரோஜாக்களின் விலையும் உயர்ந்தது. பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்து வரும் வியாபாரிகள் கோயில் விழா தேவைக்காக அதிக அளவில் பன்னீர் ரோஜாக்களை வாங்கிச் செல்கின்றனர். மே மாத துவக்கத்தில் ஒரு கிலோ ரூ.30 க்கு விற்ற பன்னீர் ரோஜாக்கள், தற்போது கிலோ ரூ.100 வரை விற்பனையாகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய விவசாயிகள், ''வெயிலின் தாக்கத்தில் இருந்து செடிகள் கருகுவதை எப்படிக் காப்பாற்றப் போகிறோம் என எண்ணி இருந்த நிலையில் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக கோடை மழை பெய்தது. இதனால் பன்னீர்ரோஜா செடிகள் துளிர்த்து பூக்கள் பூக்கத் துவங்கியது. தற்போது வரத்து குறைவாக இருப்பதாலும் தேவை அதிகமுள்ளதாலும் ரோஜாவுக்கு நல்ல விலை கிடைக்கிறது.

அடுத்தவாரத்திலிருந்து இன்னும் அதிகளவில் பன்னீர் ரோஜாக்கள் சந்தைக்கு விற்பனைக்கு வரும் நிலை உள்ளது. வரும் வாரங்களில் ரோஜாக்களின் வரத்து அதிகரித்தாலும் கோயில் விசேஷங்கள் முடிந்துவிடும் என்பதால் விலை குறைய வாய்ப்புள்ளது'' என்றனர்.