நிழற் சாலை!


வரங்கள் பெற்றவள்
நம்ம தோட்டத்து காய்க் கண்ணு
ஒடச்சி சோதிக்கவே வேணாம்
அப்படியே அள்ளி
வூட்டுக்கு வாங்கினுப் போவென
நடுங்கும் கைகளில் அள்ளி
ஒரு வெண்டையையும்
பைக்குள் திணித்தபடி
பாட்டி கேட்கிறாள்
பிஞ்சு அவரையையும் போடட்டா?
இதற்கிடைப்பட்ட இடைவெளியில்
கீரைகளுக்கு நீர் தெளித்தபடி
முதுமையை பிஞ்சுகளோடு
வாழும் வரத்தைப் பெற்ற
முதுமகளை வணங்கியபடி
நகர்கிறேன் நான்.
              - துரை நந்தகுமார்

குழியில் உறங்கும் பனி
கதகதப்பின் நிமித்தம்
நாய்கள் பறித்த
தெருவோரக் குழிகளில் 
இன்னும்
உறங்கிக் கொண்டிருக்கிறது
பனி.
            - பா.ரமேஷ்

உயிரெழுத்தின் கடைசி வார்த்தை
காற்றின் மூர்க்கம் தாளாமல்
வேருடன் சாய்ந்த மரத்தின்
கடைசி வார்த்தை
'புயலே நீயுமா ?'
என்பதாக இருக்கலாம்!
       - வீ.விஷ்ணுகுமார்

சொல்லாமல் வரும் விருந்தாளி
தேங்காய் சிரட்டையில்
ஈரமண் சுரண்டி இட்டிலிகள் சுட்டு
தரையில் பரப்பிவைத்து
தனித்துப் பேசிக்கொண்டிருக்கும்
கிராமத்துக் குழந்தைகளை
காணும்போதெல்லாம்
வலிந்து செல்லப் பழகிக்கொள்கிறேன்
அவர்களின் அழையா விருந்தாளியாய்.
       - பாப்பனப்பட்டு வ.முருகன்

வரைபவனுக்குத்
தெரியாத வண்ணம்

வானத்தை வரைந்து
பையில் சுருட்டிவைத்தான்
மஞ்சள் சட்டையணிந்த சிறுவன்.
பொத்தல்கள் வழியே
எட்டிப் பார்த்தன
நட்சத்திரங்கள்.
         - அரவிந்தன்

மிச்சமிருக்கும் உயிரின் மத்தியானம்
ஒவ்வொரு மாலைவேளையிலும்
கூடு திரும்புகிற பறவை
குஞ்சுகளுக்கு சுமந்து வருகிறது
இரையையும்
கூடவே
வேடனிடமிருந்து
தப்பித்த கதையையும்.
          - பழ.அசோக்குமார்

இனிமைக்கும் வேறு பெயருண்டு
தோகை சரிய சரிய
கரும்பு கட்டுகளை ஏற்றிக்கொண்டு
கொம்புகள் நெடிந்த மாடுகள்
நிறைமாத கர்ப்பிணியைப் போல்
அசைபோட்டபடியே இழுத்து வருகிறது
வாயில் நீரொழுக 
வாசலில் காத்துக் கிடக்கும்
பிள்ளைகளுக்காக
வண்டி நிறைய்ய்ய்ய்ய்ய மகிழ்ச்சியை.
       - கு.இலக்கியன்
 

x