சீட்டைப் புடி சீட்டைப் புடி ரயிலே..!


கே.கே.மகேஷ்

வாழ்க்கையும், ரயில் பயணமும் கிட்டத்தட்ட ஒண்ணுதான். இந்தத் தத்துவத்தை இந்த இடத்துல சொல்றதுக்குக் காரணம், சமீபத்திய ரயில் பயணத்தில் அடியேனுக்கு கிடைச்ச அனுபவம். நெல்லையில் இருந்து மும்பை செல்லும் ரயில். ஏறும்போதே குபீர் நாத்தம். கேட்டா, “மும்பையில இருந்து வந்த ரயிலை சுத்தம் பண்ணக்கூட நேரமில்ல. அப்படியே திருப்பிவிட்டுட்டோம்” என்றார்கள். என் சீட் வேற கழிவறையை ஒட்டி (சைட் லோயர்) இருந்துச்சு.

ஏற்கெனவே இருந்த நாற்றத்தை வந்தவர்கள் மென்மேலும் வளர்த்தெடுத்தார்கள். சிலர் கழிவறைக் கதவைத் திறந்துபோட்டுவிட்டுப் போய்விட, நானும், பையனும் ஓடி ஓடிப்போய் சாத்த வேண்டியதாகிவிட்டது (கதவைத்தான்). கழிவறைக்குப் போய்விட்டு வருகிற சிலருக்கு கையில் உள்ள ஈரத்தை உதற வேண்டும் என்ற ஞாபகம் என் இருக்கைக்கு அருகில்தான் வந்தது. சிவனேன்னு இருந்த என்மேல, வர்றவன் போறவன் எல்லாம் பன்னீர் தெளித்தான்.

இருக்கிற இம்சைகள் போதாதென்று கர்நாடகா எல்லைக்குள் போனபோது, ‘காளகேயர்’ படையெடுப்பு காத்திருந்தது. அன்ரிசர்வ்டு டிக்கெட் எடுத்துட்டு ரொம்ப இயல்பா முன்பதிவுப் பெட்டியில் ஏறுறதுதானே வடநாட்டுக் கலாச்சாரம்?! சீட்டில் கொஞ்சம் காலியிடம் இருந்தாலும், அனுமதி கேட்காம உட்கார்ந்துக்கிறாங்க. முதல்ல முகத்தப் பாவம்போல வெச்சுக்கிட்டு, சீட்டு நுனியில உட்கார்றவங்க கொஞ்சம் கொஞ்சமா தங்களது ‘சீட்டை’ நகர்த்தி, மொத்த இருக்கையையும் ஆக்கிரமித்தார்கள். 5 மணி நேரத்துக்கும் மேலாக டேரா போட்டிருந்த பெண்களைப் பார்த்து, “மேடம், படுக்க வேண்டும் கொஞ்சம் எந்திங்க” என்றேன். புரியாதது மாதிரி ஒரு பார்வை பார்த்தார்கள். அதையே ஆங்கிலத்தில் சொன்னேன். மறுபடியும் அதே பார்வை. அடுத்து, அரைகுறை இந்தியில் சொன்னேன். ஏதோ இலக்கணப்பிழை வந்துவிட்டது போல. பெண்கள் எல்லாம் வெடியாகச் சிரித்தார்கள். கடுப்பாகிப்போய், வேகமாக சைகை காட்டி எழச் சொன்னேன். பாராளுமன்றத்தில் ராகுலை, மோடி கேலி செய்ததுபோல, அந்தப் பெண்கள் என் கை அசைவை செய்துகாட்டிச் சிரித்தார்கள். என்னைப் பார்க்கும்போதெல்லாம் அந்தச் சம்பவத்தை ஞாபகப்படுத்தி ராகிங் செய்தார்கள் அந்த அரைக்கிழவிகள்.

x