அவரவர் வானம், அவரவர் பூக்கள்


கணேசகுமாரன்

சிலந்தியின் வயிற்றில் பத்திரமாக இருக்கிறேன்
- கவிதைத் தொகுப்பு 
விலை: 100 ரூபாய்
- பூமா ஈஸ்வரமூர்த்தி
வெளியீடு: உயிர்மை
சென்னை- 18
தொடர்புக்கு: 90032 16208

35 வருடங்களாக இலக்கிய உலகில் இயங்கிவரும் பூமா ஈஸ்வரமூர்த்திக்கு வயது 66. இந்தப் புத்தகக் கண்காட்சிக்கும் தனது கவிதைத் தொகுப்பின் மூலம் காதல் வகுப்பெடுக்கிறார் என்றால் நிச்சயம் அவரைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். காதல் பற்றின கிளைக் கதைகளுக்கு இன்னொரு படிமமாக முள் முனையில் தளும்பும் கடல்களே என்று சொல்வதிலிருந்து தன் காதல் விருத்தங்களை விவரிக்க ஆரம்பித்து விடுகிறார். வெவ்வேறு விதமான காதல்கள். வெவ்வேறு விதமான வார்த்தைகள். கவிஞரைக் கேட்டால் எல்லாம் ஒரே காதல் . எல்லாம் ஒரே வார்த்தை என்பார். வார்த்தைகளற்ற மவுனத்தை யாரின் மவுனம் யாருக்கான மவுனம் என்பதற்குப் பதிலும் மவுனமே. தொகுப்பின் தொடக்கத்தில் இழந்த பால்யமும் இயற்கையும் கவிஞரின் மொழியில் நம்மிடம் வந்து சேர்கின்றன.

ஒரு கோடையை அங்குலம் அங்குலமாய் வர்ணித்துவிட்டு முடிவில் கோடை மழையின் வருகையை மகிழ்வோடு விவரிக்கும் வாழ்வாய் காதல், இல்லறம், வாழ்வு என விரிகின்றன கவிதைகள். காக்கா, வடை திருடிய குழந்தைக் கதைக்குள் பெரும் அரசியல் புகுத்திச் சொல்லும் கவிதையோ காதலைத் தாண்டியும் சிந்திக்கும் கவிஞருக்கு வாழ்த்துகள் சொல்ல வைக்கின்றது. கவிதை என்பது எல்லாவற்றையும் சொல்லிச் செல்வதல்ல. எதையுமே சொல்லாமல் கடக்கவும் கவிதைகளால் முடியும் என்பதாய் சில கவிதைகள் தென்படுகின்றன.

x