நிழற்சாலை


வேடிக்கை

பரந்த உலகம்
நீண்ட பயணம்
குறுகிய மனங்கள்
சாதிக்கத் துடிக்கும் உலகம்
சாதித்து சலிக்காத மனிதங்கள்
சாதித்துவிட்டதாய் சில இறுமாப்புகள்
ஒற்றைப் புள்ளியில் சுழலும் பூமி
ஓய்ந்துவிடாத மானுடம்
தாய்மைக்கு தலை வணங்கும் குணங்கள்
தறிகெட்டுச் சுற்றும் பாலியல் வன்மங்கள்
ஈகை கொண்ட உள்ளங்கள்
இறை நிறந்த பல நெஞ்சங்கள்
அடித்துப்பிடுங்கும் சில அவலங்கள்
இறைவனுக்கும்
பக்தனுக்கும் இடையில்
பகிர்ந்துகொள்ள இடைத்தரகர்கள்
பரிதவிப்பில் இறைவன்
கலங்கிய குட்டைகள்
கவலை தோய்ந்த அயிரைகள்
காத்திருக்கும் கொக்குகள்
தெளிந்தும் தெளியாத பல கனவுகள்
உள்ளே கடவுள்
வெளியே பிச்சைக்காரன்
வீதியில் நிற்கிறது இறை
எல்லாம் வேடிக்கை
எதிலும் வேடிக்கை
விதியை நொந்து வாழ்க்கை
பயணங்கள் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது.
- தஞ்சைத்தரணியன்

பலூன் தூக்கம்

விழாக்கால விடியல்களில்
ஆடி மகிழ்ந்த
அயர்ச்சியில் உறங்கும்
குழந்தைகளுக்கு அருகிலேயே
சுருங்கித் தூங்குகிறது
அவர்களோடு பாடிப் பறந்த
பலூன்களும்.
- திருவெங்கட்

x