கே.கே.மகேஷ்
வெள்ளி, செவ்வாய்க்கு கவிச்சி சமைக்க மாட்டாவ பாட்டியம்மா. காளானும் தான். ஏன்னு கேட்டா, “ஏலெ, அது என்னன்னு நினைச்ச? ராவணனோட மூளை”ன்னு ஆர்வத்தைத் தூண்டுவாவ.
“எப்டி?” என்றால், “ராமருக்கும் ராவணனுக்கும் நடந்த கிளைமாக்ஸ் சண்டையில, ராவணன் மண்டையை கதாயுதத்தால அடிச்சி சம்ஹாரம் பண்ணிட்டாரு ராமர். சாகும்போது, ‘நான் இனிமேலாவது நாலு பேருக்கு பிரயோசனப்படணும்னு நினைக்கேன்... வரம் குடுங்க சாமி’ன்னு கேட்டான் ராவணன். ‘உம் மண்டையில இருந்து சிதறுன மூளை எல்லாம் காளானா முளைச்சி மக்களோட பசியைத் தீர்க்கட்டும்’னு ராமர் சொன்னாரு. வேணுமின்னா பாரு இடி, மின்னலோட மழை பெஞ்சதுக்கு மறுநாள்தான் காளான் முளைக்கும். அந்த இடி மின்னல் தான் ராம, ராவணச் சண்டை. மூளைய யாராச்சும் வெள்ளி, செவ்வாக்கிழமையில சாப்பிடுவாங்களா?” என்றார் பாட்டியம்மா.
சொன்ன மாதிரியே, இடி மின்னலோட மழை பெஞ்ச மறுநாள்தான் கூடுதல் காளான் வயக்காடு, செவக்காட்டுல மண்ணை முட்டிக்கிட்டு மேல வரும். அதுவும் மேடான நிலம், வயலோட கரை, புத்து மாதிரியான இடத்துலதான் அதிகமா முளைக்கும்னு சொல்வாங்க. காலையில 5 பயல்க காளான் பறிக்கப் போனா, எவனுக்கு முத காளான் தட்டுப்படுதோ, அவன் கண்ணுக்கு மட்டும்தான் அதிக காளான் கெடைக்குங்குகிறது இன்னொரு (மட)நம்பிக்கை. கிட்டத்தட்ட அப்படித்தான் நடக்கும். அதனால எவன் முத காளானைப் பார்க்கானோ அவன் கூட கூட்டு சேர்றதுக்கு மற்ற பசங்க எல்லாம் போட்டி போடுவாங்க.