வான் கோவுக்குப் பிடிக்காத ஓவியம்!


ஜெ.சரவணன்

மிக அழகான வண்ணக் கலவைகளில் சுருள் சுருளாய் மேகங்கள், அதன் இடையிடையே நட்சத்திரங்கள், சைப்ரஸ் மரங்கள், வீடுகள் என ‘The starry night' ஓவியம் உலகின் மிகச் சிறந்த ஓவியங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

உலகப் புகழ்பெற்ற ஓவியர்களில் மிக முக்கியமானவரான வின்சென்ட் வான் கோ வரைந்த இந்த “The starry night” ஓவியத்தின் கதையே மிக சுவாரஸ்யமானது. இந்த ஓவியம் பல கோடிக் கணக்கான மனங்களைக் கொள்ளை கொண்டது. ஆனால், வான் கோவுக்குப் பிடிக்காத ஓவியம் இது. காரணம், இந்த ஓவியம் வரையப்பட்ட சூழல் அப்படி. அவர் இந்த ஓவியத்தை வரைந்த காலத்தில் அவரை ஓவியராக யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக பைத்தியக்காரராகவே பார்த்தனர். இதனால் பெரும் மன அழுத்தத்துக்குள்ளான அவர், மனநலம் பாதிக்கப்பட்டார். அதனால் அந்தச் சமயத்தில் ஒரு காப்பகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். வின்சென்ட் வான் கோ, மனநல காப்பக அறையில் இருந்து வெளியே பார்த்த காட்சிதான் இந்த ஓவியம். 1889-களின் குளிர் காலத்தில் வரையப்பட்டது இந்த ஓவியம்.

அவர் இருந்த அறையில் ஓவியம் வரைவதற்கு அனுமதி இல்லை. காலையில் சூரிய உதயத்துக்கு முன்பு அவர் கண்ட அந்த அழகான காட்சியை அவர் பிற்பகல் நேரத்தில் வரைந்தார். இந்த ஓவியத்தில் பிரகாசமாகக் காணப்படும் நட்சத்திரம் வீனஸ். வான் கோ இதை காலை நட்சத்திரம் என்று எண்ணினார். இதை பின்னாளில் ஆராய்ச்சி செய்த ஆய்வாளர்கள், 1889 ஸ்பிரிங் காலத்தில் வீனஸ் பூமிக்கு மிக அருகில் பார்க்கக் கூடிய வகையில் தென்படும் என்று உறுதி செய்தனர்.

x