அசல் மனிதர்களும் ஒப்பனையற்ற எழுத்தும்


கணேசகுமாரன்

திருக்கார்த்தியல்
- சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர்: ராம் தங்கம்
வெளியீடு: வம்சி பதிப்பகம்
தொடர்பு முகவரி:
19, டி.எம்.சாரோன்,
திருவண்ணாமலை -606 601
அலைபேசி: 9445870995

பத்திரிகை நிருபராய் தன் பணி நிமித்தம் எழுதப்படும் கட்டுரை மொழியையும் தாண்டி கதைமொழி கைவரப்பெற்று இலக்கிய உலகில் தன் முதல் அடியைக் கம்பீரமாய் எடுத்து வைத்திருக்கிறார் ராம் தங்கம். கதைகளின் பெரிய பலமே அது நிகழும் இடம், காலம் குறித்து வாசகருக்கு எவ்வித சந்தேகமும் எழாமல் அப்படியே ஈரமாய் தன் மொழியில் எடுத்து வைத்திருப்பதுதான். செந்தமிழ் என்ற ஐந்து வயது ஏழைச் சிறுவனின் வர்ணனையில் அவன் அணிந்திருக்கும் உடையிலிருந்து இடுப்பில் இறுக்கியிருக்கும் அரைஞாண் கயிறு வரை நம் மனத்தில் பதிய வைக்கிறார். 

இதுபோன்ற விவரணைகள் அனைத்துக் கதையிலும் விரவிக் கிடந்து வாசகருக்குள் அசல் வாசிப்பினை உண்டாக்குகிறது. தொகுப்பின் முதல் கதையும் தலைப்புக் கதையுமான ‘திருக்கார்த்தியல்’ தாள முடியாத அதிர்வைஉண்டாக்கிச் செல்கிறது. ருசித்து வழங்கப்படாத ஒருவனின் வாழ்வில் பசி என்பது எவ்வாறெல்லாம் உருக் கொள்கிறது என உணர்கையில் கதை முடிவில் இடப்படும் சாபம் அவ்வூருக்கானதாய் இல்லாமல் ஒட்டுமொத்த ஆதிக்கத்துக்கும் எதிராய் அமைகிறது. கதை ஊடே வந்துபோகும் பாட்டி,தனம் கதாபாத்திரங்கள் மெல்லிய அதிர்வை ஏற்படுத்திச் செல்கின்றன. தேவதை அறிமுகம் போல் நிகழும் டாக்டர் அக்காவின் முதல் சந்திப்பைஎழுதிப்போகும் கதையாசிரியர் வாசகருக்குள் ஏதேதோ எண்ண அலைகளைஉருவாக்கிச் செல்கிறார். ஆனால், கதை ஒரு திருப்பத்தில் மொத்தமாய் தன் முகம் மாற்றித் திரும்புகிறது. அதன் பிறகு நடப்பதெல்லாம் ஜீரணிக்க முடியாத துயரப்பாதை நிகழ்வுகள். எழுத்தின் மூலம் சில மனிதர்களை நம் வாழ்வில் புகுத்தி அவர்களுக்காக பிரார்த்திக்கச் செய்யும் வல்லமை ராமுக்கு இயல்பாய் வருகிறது. தாழாக்குடி அத்தை, தெரிசனங்கோப்பு மாமன், பூதப்பாண்டி மைனி என உறவுகளைச் சொல்லிச் செல்கையிலே நாஞ்சில் நாட்டு வாசனையைத் தெளித்துப் போகிறார் கதையாசிரியர். 

x