முத்தமும் கண்ணீருமாய்... 


கணேசகுமாரன்

முத்தமும் கண்ணீருமாய்... 

வே.பாபு கவிதைகள்
- கவிதைத் தொகுப்பு
விலை: ரூ.120
வெளியீடு:
தக்கை
15, திரு.வி.க.சாலை
அம்மாபேட்டை
சேலம்-636003.

ஏதோ ஒரு கணம்தான் தீர்மானிக்கிறது எல்லாவற்றையும். தமிழின் மிகச் சிறந்த கவிஞர்கள் பலரும் வாழ்வின் பூரணத்துவம் எட்டாமல் இளம் வயதிலே மரணிப்பது இலக்கிய உலகின் சாபமாகவே தொடர்ந்து வருகிறது. பாரதி தொடங்கி பல கவிஞர்கள் தங்கள் படைப்புகளை நிரந்தரமாக்கி தங்களைத் தொலைப்பது என்பது வாழ்வின் அபத்தம்தான். அந்த வரிசையில் சமீபத்தில் இறந்துபோன சேலம் வே. பாவுவின் கவிதைகள் அவர் இறந்து ஒரு மாதம் கழித்து அவர் நண்பர்களின் முயற்சியில் மொத்தத் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. 90 களிலிருந்து எழுதிவரும் வே. பாபு, ‘மதுக்குவளை மலர்’ என்ற கவிதைத்தொகுதி மூலம் பரவலாகப் பேசப்பட்டவர். ‘தக்கை’ என்ற அமைப்பை சேலத்தில் நிறுவி பதிப்பகமும், இலக்கியக் கூட்டங்களும் தொடர்ந்து நடத்தி வந்தார். உடல் நலக் குறைவின் காரணமாக தன் 44 வது வயதில் கடந்த மாதம் உயிர் நீத்தார் வே.பாபு.
பாபுவின் மரணம் கவிதையுலகின் ஈடு 
செய்ய முடியாத இழப்பு. அதற்குக் கட்டியம் கூறுவது போல் அமைந்திருக்கிறது இக்
கவிதைத்தொகுப்பு. வாழ்வின் அபத்தங்களை, நிலையாமையை, கசடுகளை மெல்லிய நகைச்
சுவையுடன் தன் கவிதையில் எழுதிப்போகும் வே.பாபு, அதன் ஊடாக மீப்பெரும் வலியை 
நமக்குள் கடத்திச் செல்கிறார். காதலும், மரணமும், வாழ்வும் கண்ணீரில் பிணைந்து 
இத்தொகுப்பு முழுவதும் படைக்கப்பட்டிருக்கிறது எனலாம். நிகழும் அல்லது நிகழாமல் போகும் யதார்த்தத் தினைத்தான் பாபு,
‘ஒரு கணம்
உண்மையோ பொய்யோ
சற்று கண்ணயர்கிறது’
என்று எழுதிப்போகிறார். தனிமையின் வாதையை,
‘ஒரே ஒரு
மிஸ்டு காலுக்குப் பிறகு
அணைக்கப்படும் அலைபேசிக்கு
ஆயிரம் கிளைகள்’
என்கிறார். கவிஞன் வடிவமைக்கும் படிமம் ஏதாவது ஒரு விதத்தில் நம்மைத் தொந்தரவு செய்தால் அக்கவிதை தன்னளவில் வெற்றி பெற்றுவிடுகிறது.
‘ஒரு பொழுதுக்கும் மேலாக
துடித்துக்கொண்டிருக்கும்
மலைப்பாம்பு வயிற்றின் காட்டு முயலே
எப்போது அடங்குவாய்?’
என்பதில் சாவுகூட சட்டென்று நிகழ்ந்துவிட வேண்டுமென்ற பதற்றமே கூடி வருகிறது. உற்றார் உறவினர்களுடன் கூடி வளர்ந்தாலும் ஒவ்வொரு மனிதனும் சில சமயங்களில் தன் அநாதைத் தன்மையை உணரக்கூடும்.
‘உங்களோடு யாரும் வரலையா
எனும் டாக்டரின் கேள்வியை
யாரிடம் சொல்வதென
எண்களைத் துழாவுகிறான்’
என்ற வரிகளுக்குப் பின்னிருக்கும் தனிமைத் துயரை எதுகொண்டும் தீர்க்க முடியாது என்பது வலி நிரம்பிய நிஜம். பல கவிதைகளின் முடிவில் கவியழகுக்கு இடம்பெறும் வார்த்தைகள் பெரும் பரிதவிப்பை உண்டு பண்ணுகின்றன. என் செல்லமே என்ற செல்ல வார்த்தைகள் பாபுவின் கவிதையில் இடம் பெறும் இடம் அசாதாரணத்தை நோக்கிச் செல்கின்றன. திடீரென்று பெய்யும் மழையை எதிர்பாராத முத்தத்துக்கு உவமையாக்கி மகிழும் பாபு, இன்னொரு கவிதையில் தற்கொலை தவிர்க்கும் வருகையாய் குறிப்பிடுகிறார். இப்படி முத்தமும் கண்ணீருமாய் தொகுப்பு முழுவதும் எளிய மனத்தின் எச்சில் உறைந்து கிடக்கிறது.
‘இலட்சத்தில் ஒருவனுக்குதான்
அபூர்வமலர் கிடைக்கிறது
அது உதிரும் தருவாயில்...’
என பாபு சொல்வது போலவே பெரும்பாலானவர்களின் வாழ்க்கையும் அமைகிறது. பாபுவின் காதலுக்குச் சொல்லப்பட்ட வார்த்தைகளில் நிறைவேறாத பலரின் காதலும் தென்பட்டு மறைகின்றன. பறவைகளில்லா கூண்டுகள் மிக அழகானவை என்பதில் இருக்கும் சுதந்திர வேண்டுதல் நாம் அனைவரும் உணர்ந்ததுதானே. பறவையின் பாதை போல எச்சுவடுமற்று வாழும் வாழ்க்கை எவருக்கும் இங்கே அளிக்கப்படவில்லை. முக்கியமாகக் கவிஞனுக்கு! தொகுப்பின் கடைசிக் கவிதையின் கடைசி வரிபோல் பாபு பேசுவதை நிறுத்திக்கொண்டார். இனி இலக்கிய உலகம் அவரைப்பற்றிப் பேசத் தொடங்கும்.

x