சென்னை ஈசிஆரில் உள்ள தக்ஷிண் சித்ராவில் சமீபத்தில் நடந்த கண்காட்சியில் கலந்துகொண்டார் மைசூரைச் சேர்ந்த ஓவியர் தர் ராவ். அவருடைய ஓவியங்கள் மைசூரின் மண்ணின் பாரம்பரிய ஓவிய முறையைச் சார்ந்தவை. புராதன முறையிலான அவருடைய ஓவியங்கள் முழுக்க முழுக்க தெய்வீகமணம் வீசுகிறது. அவரிடம் பேசியதிலிருந்து...
80-களைச் சேர்ந்த நீங்கள் மைசூர் மண்ணின் ஓவியக் கலையை எப்படி கற்றீர்கள்?
என்னுடைய அப்பா ஒரு தச்சர். சிறு வயதில் நான் தந்தையுடைய வேலைப்பாடுகளைப் பார்த்து பிரமித்து வளர்ந்தேன். ஆனால், என்னவோ கலையின் மீது ஆர்வம் வந்த எனக்கு, தச்சர் வேலையில் நாட்டம் செல்லவில்லை. எனக்கு அதையும் தாண்டிய கனவுகள் இருந்தன. வண்ணங்களை நான் தேர்ந்தெடுத்தேன். தவழும் வயதிலேயே நான் கிடைத்ததையெல்லாம் வைத்து ஏதோ வரைந்துகொண்டிருப்பேன் என்று அப்பா அடிக்கடி சொல்வார். நான் ஓவியனாகக் காரணமும் அப்பாதான். எனக்குள் இருந்த ஆர்வத்தையும் திறமையையும் வெளிக்கொண்டுவந்து சரியான இடத்துக்கு என்னை அனுப்பி வைத்தார். மைசூரின் பாரம்பரிய ஓவியக் கலையில் புகழ்பெற்ற ஓவியர் கேவி சீதாராமனிடம் என்னை அறிமுகப்படுத்தி என்னுடைய ஆர்வத்துக்கு தீனி போட்டார். அவர் மூலமாகத்தான் மைசூர் மண்ணின் ஓவியம் எனக்குள் வந்தது.
அந்த ஓவிய முறையைப் பற்றிச் சொல்ல முடியுமா?