பேசிக்கிட்டாங்க..!


மதுரை
பெரியார் பேருந்து நிலைய கட்டணக் கழிப்பறை வாசலில் பயணியும் பணியாளரும்...
``அஞ்சு ரூபாதானே... பத்து ரூபா கொடுத்தேன். மீதி கொடுங்க''
``சில்லறை இல்லை சார். நாளைக்கு வரும்போது கழிச்சுக்கலாம்''
``ஏன்யா... இதுக்காக நான் நாளைக்கு காரைக்குடியில இருந்து இங்க வரணுமா..? ச்சே... காலைக் கடனை விட இந்தக் கடன்தான் பெரிய அவஸ்தையா இருக்கு.''
(முணுமுணுத்தபடி டாய்லெட்டுக்குள் செல்கிறார்) 
- மதுரை, எம்.விக்னேஷ் 

கிருஷ்ணகிரி
பேருந்து நிலையம் அருகில் இருவர்...
``மச்சி... வர்ற திங்கள் கிழமை எனக்குக் கல்யாணம் ஞாபகமிருக்கா?''
``மறக்க முடியுமாடா... சரி, முகூர்த்த டைம் என்ன?''
``காலை ஆறுல இருந்து ஏழரை!''
``இந்த டைமையும் மறக்கவே முடியாதுடா!''
``எப்படிடா சொல்ற..?''
``எனக்கும் அப்படி ஒரு திங்கள்... அதே காலை ஆறுல இருந்துதானே ஏழரை ஸ்டார்ட் ஆச்சி...''
(நண்பர் முறைக்கிறார்)
- கிருஷ்ணகிரி, வீ.விஷ்ணுகுமார்

புத்தேரி
மீன்சந்தையில் மீன் வாங்க வந்த பெண்ணும் மீன் விற்கும் பெண்ணும்...
``ஏம்மா! ரெண்டு நாளா மீன் பிடிக்க யாரும் கடலுக்குப் போகலைன்னு டிவில செய்தி பார்த்தேனே, அப்ப இது ஐஸ் மீனா?''
“ஒரு வாரத்துக்கு முந்தின சிக்கன், சாம்பார், தோசை மாவெல்லாம் ஃப்ரிஜ்ல வைச்சு திங்கிற நீங்க இதுவும் கேட்பீங்க, இதுக்கு மேலேயும் கேட்பீங்க ?”
“உள்ளதைச் சொன்னா ஏம்மா இப்படி கோபப்படுற!”
“நான் மட்டும் இல்லாததையா சொன்னேன்?”
 நாகர்கோவில், எ.முகமது ஹுமாயூன்

திருச்சி
ரயில்வே ஜங்ஷன் அருகே இருவர்...
``மாப்ளே! உன் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டாங்களாமே...சொல்லவே இல்ல!''
``இதையெல்லாம் கூடவா ஊரக்கூட்டிச் சொல்வாங்க!''
``சொல்லியிருந்தா உன் வீட்டிலே பார்ட்டி வெச்சு, அதகளம் பண்ணியிருக்கலாமே!''
``அவ தெரு முழுக்க உஷார் பண்ணி வெச்சிட்டு போயிருக்கா! புதுசா ஆள் நடமாட்டம் தெரியுதானு பார்த்து உடனே போன் அடிக்கிறதுக்கு ஆளையும் ரெடி பண்ணி வச்சிட்டுத்தான் எப்பவுமே ஊருக்குப் போவா... எதாவது எக்குத்தப்பா நடந்தா, அடுத்த நிமிஷமே போன் போட்டு தாளிக்க ஆரம்பிச்சிடுவா. நீ வாங்கிக் குடுக்கிற பீரை குடிச்சிட்டு, என்னை நார்நாரா கிழிபடச் சொல்றியா! போவியா வேலையைப் பார்த்துக்கிட்டு!''
தஞ்சாவூர், தே.ராஜாசிங் ஜெயக்குமார்

x