தத்துவவியலாளர், ஆராய்ச்சியாளர், அறிவியல் அறிஞர், ஓவியர் எனப் பன்முகத் திறமை கொண்ட மாமனிதர் லியனார்டோ டாவின்சி. அவரது 500-ம் ஆண்டு நினைவு நாள் விரைவில் வரவிருக்கிறது. அதை முன்னிட்டு டாவின்சியின் மிக அரிதான மூன்று புத்தகங்கள் முதன்முறையாகக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. பிரிட்டிஷ் லைப்ரரி இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்கிறது. இதில், codex leicester என்ற புத்தகம் 1994-ல் பில்கேட்ஸ் 30 மில்லியன் டாலருக்கு வாங்கிய புத்தகம். அரிஸ்டோகிரடிக் குடும்பத்தாரால் பல நூறாண்டுகள் பாதுகாக்கப்பட்டு வந்த இந்தப் புத்தகத்தை பில்கேட்ஸ் தற்போது பிரிட்டிஷ் லைப்ரரிக்கு அன்பளிப்பாகக் கொடுக்கிறார். இதை பில்கேட்ஸுக்கு முன் அமெரிக்க எண்ணெய் நிறுவன தொழிலதிபர் ஆர்மந்த் ஹாமர் என்பவர் வைத்திருந்தார். அவர் அதை 1980-ல் வாங்கினார். இதுதவிர, விக்டோரியா ஆல்பர்ட் மியூசியம் வைத்துள்ள codex forster, பிரிட்டிஷ் லைப்ரரி வைத்துள்ள codex arundel ஆகிய மற்ற இரு புத்தகங்களும் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
நூலரங்கம்: நின்று நிலைக்கும் இடைவெளி!
கணேசகுமாரன்
பரிசல் செந்தில்நாதனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் ‘இடைவெளி’ சிற்றிதழின் நான்காவது புத்தகம் வெளிவந்திருக்கிறது. சிற்றிதழ் தளத்துக்கான வடிவமைப்பு என்றாலும் உறுத்தாத இடைவெளியில் எழுத்துகள் கட்டுரை, கதைகளில் வெளிப்பட்டு வாசிப்பின் இன்பம் கூட்டுகிறது. கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு இதழ் வெளிவந்திருக்கிறது. கட்டுரை சிறப்பிதழோ என எண்ணும் அளவுக்கு வெவ்வேறு தளத்தில் வெவ்வேறு ஆளுமைகளின் எழுத்துகளில் கட்டுரைகள் விரிகின்றன. பார்க்க 4 பக்கங்கள் என்றாலும் எழுத்துருவில் தலையங்கம் மிக நீளமாய் வெளிப்படுகிறது. வழக்கம்போல் புதியவர்கள் தீவிர இலக்கியத்தில் தாங்கள் அழுந்த வைக்கும் முயற்சியில் வெல்கிறார்கள். பெரு. விஷ்ணுகுமாரின் கவிதைகள் அதற்குக் கட்டியம் கூறுகிறது. குமாரசெல்வாவின் ’குன்னிமுத்து’ நாவல் குறித்த விமர்சனமாக விரியும் ராஜ் அவர்களின் எழுத்து, நாவலையே வாசித்த திருப்தி தருகிறது. யவனிகா ராமின் கவிதைகள் குறித்து பாலா கருப்பசாமியின் கட்டுரை அவரவர்களின் பர்சனல் விஷயங்களையும் பேசிப்போகிறது. மிகப் பிரமாதமான அனுபவ விவரிப்பு. கார்த்திக் பாலசுப்ரமணியனின் `முன் நகரும் காலம்’ சிறுகதை பெரும் வலி கடத்தியாய் போகிறது. நரோபாவின் `சிதல்’ சிறுகதை, கதையிலிருந்து எழுத்து நடை என எல்லாவற்றிலும் புதிதாய் திகழ்கிறது. த.ராஜனின் `பாலூட்டிகள்’ சிறுகதை வாசிப்பில் பிரமிப்பூட்டுகிறது. தீவிர இலக்கியத்தில் சிறுகதைகளுக்கான இடம் என்பதை எந்நாளும் அழிக்க முடியாது என்பதையே நூலில் இடம் பெற்றிருக்கும் கதைகள் தெரியப்படுத்துகின்றன.