மணிமேகலை டீச்சர்
அம்மாவைப் போலவே எனக்கு
மணிமேகலை டீச்சரையும் பிடிக்கும்.
விழிகளை உருட்டி உருட்டி
நிறைய கதையும் பாட்டும் சொல்வார்.
அம்மா சமைக்காத நாட்களில்
டீச்சரின் டிபன் பாக்ஸ்
பருப்பு உருண்டைதான் பசியாற்றும்.
செய்யுள் ஒப்புவிக்கும் போட்டியில்
வாங்கிய பரிசுக் கோப்பையை
பார்க்கும்போதெல்லாம்
மனசுக்குள் டீச்சரின் முகம் மலரும்.
சமீபத்திலொரு நாள்
பேருந்துப் பயணத்தில் கண்ணில்பட்டது
டீச்சரின் கண்ணீா் அஞ்சலி போஸ்டா்.
மெதுவாய் நகரும் பேருந்துக்குள்
வேகமாய் பரவியது பருப்பு உருண்டை வாசம்!
- காசாவயல் கண்ணன்
நினைவுகளின் ஈரம் காய்வதில்லை
நினைவுகளிலேனும் புரையேறி
ஒவ்வொருவருக்கும்
கண்ணீர் வரவழைத்துக்கொண்டுதான் இருக்கிறது
அன்றைய மழைக் காலங்களில்
ஈர விறகோடு போராடி
அம்மா சமைத்துத் தந்த சோறு!- கீர்த்தி
றெக்கைகளுக்குள் உறங்கும் இரவு
பகலை எங்கேயோ விட்டுவிட்டு
திரும்பிக்கொண்டிருக்கின்றன வலசைப் பறவைகள்.
வெய்யிலையும் தூரத்தில் தொலைத்துவிட்டு
மழையை கூடவே அழைத்து வந்திருக்கின்றன.
பறவைகளைப் பின்தொடர்ந்து
வந்துகொண்டிருக்கும் இரவுக்கு
மழையில் குளிரெடுக்க ஆரம்பித்துவிட்டது.
கூடுகளில் நுழைந்ததும்
இருளை அள்ளி போர்த்திக்கொண்டு உறங்கிவிட்டது.
பசியில் கத்தும் குஞ்சுகளுக்கு
உணவூட்ட உதவியாக
மரத்தைச் சுற்றிலும் விளக்கேற்றுகின்றன
மின்மினிகள்!
- வலங்கைமான் நூர்தீன்
நிறைவு
ஊசித் தூறலுக்கே
ஒழுகும் குடிசையிலும்
கால் வயிற்றுக் கஞ்சியில்
முழுதாக நிறைந்திருந்தது மனசு.
இப்போது யார் யாரோ வந்து
ஏதேதோ தந்து
வயிறை நெறைச்சாலும்
குறையாகத்தான் படுகிறது
நிவாரண முகாமில்
நிர்மூலமாகி நிர்கதியாய்
நிற்போருக்கு!
- கா.இளையராஜா