நிழற் சாலை!


சங்கமிக்கும் கோடுகள்

அண்மையிலிருந்தும் பாராதிருந்திருக்கிறேன்
வாய்ப்பேச்சை கேளாதிருந்திருக்கிறேன்
தடையற்றுப் பறக்கும் பறவையென
சிறகற்றிருந்தும் பறந்திருக்கிறேன்
ஒத்திகைக் கனவுகளும்
நேரெதிர் நினைவுகளும்
ஒரு கோட்டில் சங்கமிக்க
திகைப்பில் ஆழ்ந்திருக்கிறேன்
இத்தனைக்கும் காரணமாயிருந்து
கன்னத்தில் உலர்ந்துகொண்டிருக்கிறது
உன்னுடைய பறக்கும் முத்தம்!
           - பாப்பனப்பட்டு வ.முருகன்

பால்யங்கள் சுமந்த கொட்டகை

மாலையில் பவுடர் பூசி
இரண்டு மைல் நடந்து
அப்பா அம்மாவோடு
பாலமுருகன் திரையரங்கில்
பார்த்த ‘பாகப்பிரிவினை’யை
இப்பவும் மனசு பாகம் பாகமாய்
ஓட்டிப் பார்க்கும்.
ஒரு மதிய காட்சியின்போது
வால்டர் வெற்றிவேல்
மனசில் நிரம்பினார்
ஐந்து ரூபாய் டிக்கெட்டில்.
வகுப்பு ஆசிரியரின் கல்யாணத்தன்று
தியேட்டருக்குள் நுழைந்த
மொத்த வகுப்பறைக்கும்
‘அட கண்ணடிச்சா காதல் வரும்
சொல்றேங்க’ எனப் பாடமெடுத்தார்
‘பாட்ஷா’ ரஜினி.
இப்போது ஊருக்குப்போனால்
என் பால்யத்தை சுமந்த
பாழடைந்து செங்கல் உதிர்ந்த
பாலமுருகனிடமிருந்து
எனக்கு மட்டும் கேட்கிறது
‘சோடா கலர் டீ முறுக்கேய்...’
         - வீரசோழன் க.சோ.திருமாவளவன்

x