நிழற்சாலை..!


முன் அந்திமம்
கருப்பாக இருப்பதற்கு
கலங்கியது நாள்கணக்கில்.
நெல்லுச் சோற்றுக்கு
ஏங்கிய நாள் நிறைய.
உறைக்க புளிக்க தின்ன தேடியதும்
பளிச்சென வெள்ளையாய்
மனைவி தேடி பரிதவித்ததும் நாள் பல.
கிடைத்ததை ஏற்ற வாழ்வில்
முரண்களுக்கும் நிராசைகளுக்கும் நடுவில்
முண்டி முன்னேறி வந்தபோது
முற்றுகையிடும் நோயைத் தவிர்க்க
நாடிய மருத்துவர் சொன்னார்
காரம் புளி கைவிடு
வெள்ளை சர்க்கரை, உப்பு, அரிசி தவிர்!
- ஜனநேசன்


மறதியை மறந்து போ!
நீ பேசி வாழ்ந்த வனத்தில்
ஒருமையில் அழைக்கப்படும்
மரமாக நான் இருந்ததை
ஒருபோதும்
உன் மௌன வாழ்க்கையில்
மறந்துவிடாதே!
- ப.சுடலைமணி

பேருருவின் வெளிச்சம்
ஒற்றைச் சாயம் பூச நீங்கள் வரும்போது
கசியும் பல வண்ணங்கள் என்னுள்ளிருந்து.
ஒரு சிமிழுக்குள்
அடைக்க யத்தனிக்கிறீர்கள்
எடுக்கிறேன் பேருரு.
கூண்டோடு நீங்கள் வருவதற்குள்
எனக்குள் முளைத்துவிடுகிறது சிறகு.
குறிப்பிட்ட அடையாளத்தில் பொருத்திவிட
முயற்சி செய்கிறீர்கள்.
மாறிக்கொண்டே இருக்கின்றன
என் முன் அடையாளங்கள்.
பரிதவிக்கிறீர்கள்
ஒற்றைப் புள்ளிக்குள் என்னை ஒடுக்கிவிட
பீறிட்டுக்கொண்டிருக்கிறது
என் பன்மம்!
- வெற்றிப்பேரொளி

x