ஏ.ஆர்.ரஹ்மானின் வெற்றிப் படிகள்


இசையில் மகத்தான சாதனைகளைப் படைத்தவர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். ஆஸ்கர், கோல்டன் குளோப், தேசிய விருது, கிராமிய விருது உள்ளிட்ட விருதுகளோடு சேர்த்து கோடிக்கணக்கான இதயங்களையும் வென்றவர். ஏ ஆர் ரஹ்மானின் இசையை அறிந்த அளவுக்கு நமக்கு அவரின் வாழ்க்கைப் பயணம் பற்றித் தெரியாது. அந்தக் குறையை நிறைவு செய்ய வந்துள்ளது அவரது வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் நூல். 'Notes of a Dream' என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் இந்த நூல் ரஹ்மானின் வாழ்க்கைப் பயணத்தின் சுவாரஸ்யங்களை முன்வைக்கிறது. கிருஷ்ணா திரிலோக் என்பவர் எழுதியிருக்கும் இந்த நூலை பென்குயின் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. வெற்றி, தோல்வி, திருப்புமுனை, காதல், தத்துவம் என இந்த நூல் ரஹ்மானின் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்குமான படைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

சாபம் நீங்கா வாழ்வின் அலைதல்

கணேசகுமாரன்

சரவணன் சந்திரனின் புதிய நாவல். தன் முந்தைய நாவல்களிலிருந்து கொஞ்சம் மாறுபட்ட எழுத்தைத் தந்திருக்கிறார் இதில். அதிகம் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தி அவர்களின் வழியே நாவலை நகர்த்திச் சென்றார் தனது முந்தைய நாவல்களில். இதில் இளங்கோ அத்தை என்ற பிரதான கதாபாத்திரத்தின் வழி தொடங்குகிறது கதை. தன்னை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் பாம்பெனத் தொடங்கிய கதையை வாசகனின் மனத்திலிருந்து கடைசிவரை விரட்டிவிடாமல் பாதுகாத்த வகையில் பாராட்டுகள். அத்தை, மாமா, தாத்தா, ஆச்சி என சரவணன்
சந்திரன் விவரிக்கும் அந்த உலகம் எல்லா கயமைகளுடன் துரோகங்களுடன் நம் கண்முன் விரிகிறது. கதை நாயகனின் வாழ்வில் வரும் கீர்த்தனா குறித்த காதலையும் காமத்தையும் எழுத்தாளர் தனது புதிய பார்வையில் தந்துள்ளார். சாபம் கண்டபின் நாயகனுக்கு நிகழும் சம்பவங்களில், தனது முந்தைய நாவலான அஜ்வாவில் சரவணன் சந்திரன் கையாண்ட போதை எழுத்து இதில் காமமாக ஞாபகம் வருகிறது. சமரசம் செய்துகொள்ள விரும்பாத ஆசிரியரின் நடையில் வழுக்கிச் செல்கின்றன பக்கங்கள். இவை எல்லாமே அச்சாப நிலத்தை நாயகன் தீண்டும்வரைக்கும்தான். 

x