நிழற்சாலை


வந்த பறவையும் வராத பறவையும்

வேடந்தாங்கல் சரணாலயத்தில்
தவிட்டு நிறமாய்
கருந்தலை காட்டுச்சில்லை
ஐரோப்பிய பறவையென்று
சொன்னார்கள்.
அருகில் சென்று
அதனிடம் கேட்டேன்
கூகுள் மேப் பார்க்காமல்
எப்படி வந்தாய் என்று.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு
கூழைக்கடா வரும் காலமிது
ஏரியில் நீரில்லாததால்
பறவை வரவில்லை என்றார்கள்.
அடுத்தமுறை வந்தால்
அதனிடம் கேட்கவேண்டும்
இங்கு தண்ணீரில்லையென்று
உன்னை யார் உஷார் செய்தது?
- கிழக்கு தாம்பரம், கார்த்திக் பத்ரி

வாழ்வைத் துரத்துதல்...

பசியோடு சாப்பிட அமரும்போது
விக்கல் வந்து படுத்துகிறது.
இறங்கும் நிறுத்தம் வரும்போது
நமக்குப் பிடித்த பாடல்
பேருந்தில் ஒலிக்கத் தொடங்குகிறது.
விடுமுறை நாளாய் பார்த்துதான்
மழையும் பெய்து தொலைக்கிறது.
எதிர்பார்ப்பதை
பெரும்பாலும் நிகழ்த்திடாத
இந்த வாழ்வைத் துரத்துவதுதான்
எத்தனை சுகமானது!
- இடையாத்தி வடக்கு, சாமி கிரிஷ்

x